அறிமுக இயக்குனர் வி.எஸ்.இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்கு ‘ஊமை விழிகள்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த படத்தைப்பற்றி இயக்குனர் வி. எஸ்.தெரிவிக்கையில்,“ ஊமை விழிகள் புதிய தலைமுறைக்கான ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகி வருகிறது. இதில் பிரபுதேவா தாவரவியல் விஞ்ஞானியாக நடிக்கிறார். அவருடைய மனைவியாக மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். இவர்களுடைய பிள்ளையாக குழந்தை நட்சத்திரம் ரோஷன் நடிக்கிறார்.

பிரபுதேவா, மம்தா மோகன்தாஸ், ரோஷன் என மூவருக்கும் எதிர்பார்க்காத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதன் பின்னணி என்ன ? அதன் முடிவு என்ன? என்பது தான் படத்தின் திரைக்கதை. இந்த படத்தில் இவர்களுடன் வினோதினி வைத்தியநாதன், ஹரிஷ் பராடி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஊட்டி, மைசூர், முதுமலை, சென்னை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.” என்றார்.

விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஏ.எம். காஸிப் இசையமைக்கிறார்.

‘ஊமை விழிகள்’ என்ற பெயரில் 33 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட கல்லூரி மாணவரான அரவிந்தராஜ் இயக்கத்தில், விஜய்காந்த் நடிப்பில் படமொன்று வெளியானது என்பதும், நடிகர் பிரபுதேவா ‘பொன்மாணிக்கவேல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், குழந்தை நட்சத்திரமான ரோஷன் முன்னாள் நடிகை சிவரஞ்ஜனி= தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் தம்பதியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.