சுகாதார சேவையை விரைவுபடுத்தும் நோக்கில் சிப்லைன் (Zipline) நிறுவனம், சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து ட்ரோன் விநியோக சேவையினை முன்னெடுக்கவுள்ளது. 

உயிராபத்தில் உள்ள நோயாளர்களுக்கு உடனடியாக தேவைப்படும் மருந்துகள், உடல் உறுப்புக்கள் மற்றும் இரத்த மாதிரிகளை ட்ரோன் விநியோக சேவையின் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வளர்ந்து வரும் தொழினுட்ப வளர்ச்சிக்கு அமைய இந்த மருத்துவ  ட்ரோன் விநியோக சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்த உள்ளதோடு மருத்துவ துறையில் புதிய திருப்பமாகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் இந்த நவீன சேவையை அறிமுகம் செய்ய உள்ள   சிப்லைன் (Zipline) நிறுவனம், சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் முக்கியத் தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் இலங்கை வான்பரப்பில்  ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. 

எனினும் எமது திட்டம் தொடர்பில் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து அரசாங்கம் எமது திட்டத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சிப்லைன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி யானிவ் கெல்னிக் தெரிவித்தார்.

இந்த திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. அதில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சிப்லைன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி யானிவ் கெல்னிக்,

இலங்கை மற்றும் உலகெங்கிலும் முக்கிய சுகாதாரப் பொருட்களை பெற்றுக்கொள்கின்றமை பெரும் சிக்கல் மிக்கதாக உள்ளமைக்கு தூரம் முக்கிய காரணியாக உள்ளது.

மத்திய சேமிப்பகத்திலிருந்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதார வசதிகளின் தேவைக்கு மருந்துகளை விநியோகம் செய்ய வேண்டிய தேவையுள்ளது.

குறிப்பாக  அண்மைய ஆண்டுகளில் இலங்கை வெள்ளம், நிலச் சரிவுகள் மற்றும் பல துரதிர்ஷ்டவசமான பேரழிவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

 இதுபோன்ற அனர்த்தங்களின் போது மனித உயிர்களை பாதுகாக்க அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக இலங்கையில் அம்பியூலன் போன்ற சேவைகள் காணப்பட்டாலும் நாட்டில் நிலவும் கடுமையான வாகன நெரிசல் இயற்கை பேரழிகள், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றினால் ஒரு மனிதனின் உயிராபத்தான நேரங்களில் அவனுக்கு உரிய மருத்து உதவி கிடைக்காமல் போய்விடுகின்றது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு திட்டமாகவே சிப்லைன் மருத்துவ  ட்ரோன் விநியோக சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்த உள்ளது.

சிறந்த சுகாதார பராமரிப்பு துறையை இலங்கை கொண்டுள்ள போதிலும், பாரம்பரிய வாகனங்கள் ஊடான விநியோக சங்கிலி முகாமைத்துவத்தை துரிதப்படுத்த வேண்டிய தேவையுள்ளமையை சுகாதாரத்துறை சார் நிபுணர்கள் இணங்கண்டுள்ளனர்.

அனைத்து பிரஜைகளுக்கும் அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் முக்கியமான சுகாதார சேவையை விரைவாக வழங்க வேண்டிய அவசியம் உள்ளது.

சிப்லைன்  அறிமுகப்படுத்தியுள்ள உயிர் காக்கும் மருத்துவ ட்ரோன் விநியோக சேவையின் மூலம், நேரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருக்கும்போது தடுப்பூசிகள், இரத்தம் மற்றும் பிற உயிர் காக்கும் பொருட்களை உடனடியாக விநியோகம் செய்ய முடியும்.

இது பேரழிவு சூழ்நிலையின் போது அதனால் பாதிக்கப்படும் மில்லியன் கணக்கான மக்கள் விரைவாக சுகாதார சேவையை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த உதவும்.

உலகளாவிய ரீதியில், இந்தியாவின் மகாராஷ்டிராவுக்கு மேலதிகமாக, கானா மற்றும் ருவாண்டாவின் அரசாங்கங்களுடன் பங்காளராக சிப்லைன் இணைந்துள்ளது.

 அங்கு அவை அடுத்த பல ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 700 மில்லியன் மக்களுக்கு சேவை செய்வதே ஜிப்லைனின் குறிக்கோளாகும் என்றார்.