(செ.தேன்மொழி)

கட்டானை பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ,பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸாகேவத்த பகுதியில் வீடொன்றின் முன்னால் நேற்று மாலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திஸாகேவத்த - களுவாரிப்பு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது , 

உயிரிழந்த நபரும் காயமடைந்த பெண்ணும் கணவர் மனைவி ஆவர் . இவர்களிருவரின் மகனை குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் மோட்டார் சைக்கிளில் போகும் போது அச்சுறுத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த இளைஞன் இந்த விடயம் தொடர்பில் அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்து இளைஞனின் பெற்றோர்களான உயிரிழந்த நபரும் , காயமடைந்த பெண்ணும் சந்தேக நபர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்போது இடம்பெற்ற மோதலின் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது சந்தேக நபர்கள் நால்வரும் சேர்ந்து உயிரிழந்த நபரையும் அவரது மனைவியையும் பொல்லால் தாக்கியுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த  இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கணவர் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்னர். கட்டானை மற்றும் களுவாரிப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 - 36 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.