(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குசீட்டு அச்சிடுவதற்கான மாதிரி வாக்குச்சீட்டு அரச அச்சக கூட்டுத்தாபன தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல்களை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இம்முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலத்திற்கு தயாரிக்கப்படும். இவ்வாறு வாக்குச்சீட்டின் அசாதாரண நீளம் காரணமாக, வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 70 ஆகவும், வாக்கு எண்ணுபவர்களின் எண்ணிக்கை 175 ஆகவும் அதிகரிக்கும்.

தேர்தல் நிமித்தம் பிளாஸ்டிக் வாக்குப்பெட்டிகளை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வாக்குப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாக்குச்சாவடி மற்றும் உதவி ஊழியர்களை அதிகரிக்க வேண்டி ஏற்படும்.

இவை மாத்திரமின்றி போக்குவரத்து வசதிகள், மின்சாரம், தண்ணீர், தொலைபேசி உள்ளிட்ட பொது சேவைகளை அதிகரிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. இவற்றின் காரணமாகவே இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான செலவீனங்கள் அதிகரிக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.