பானுக்க ராஜபக்ஷவின் அதிரடியான அரைசதத்துடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி 182 ஓட்டங்களை குவித்துள்ளது.

லகூரில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

தனுஷ்க குணதிலக்க - அவிஷ்க பெர்ணான்டோ இருவரும் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடியபோது தனுஷ்க குணதிலக்க 15 ஓட்டத்துடன் இமாட் வஸீமின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் சப்ராஸ் அஹமட்டிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

2 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய பானுக்க ராஜபக்ஷவுடன் ஜோடி சேர்ந்து ஆடமுற்பட்ட அவிஷ்க பெர்ணான்டோ ஐந்தாவது ஓவரின் நிறைவில் 8 ஓட்டத்துடன் ரன்அவுட் ஆனார் (41-2).

இதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய செஹான் ஜெயசூரியவுடன் கைகோர்த்த பானுக்க ராஜபக்ஷ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி 10 ஓவர்கள்  நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை குவித்தது.

தொடர்ந்தும் அதிரயான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பானுக்க ராஜபக்ஷ 11, ஆவது ஓவரில் அரைசதம் விளாசினார். 

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 15 ஓவர் நிறைவில் 135 ஓட்டங்களை குவித்திருந்தது. ஆடுகளத்தில் பானுக்க ராஜபக்ஷ 70 ஓட்டத்துடனும், செஹான் ஜெயசூரிய 34 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இந் நிலையில் 15.2 ஆவது ஓவரில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, 16.1 ஆவது ஓவரில் பானுக்க ராஜபக்ஷ மொத்தமாக 48 பந்துகளை எதிர்கொண்டு 6 ஆறு ஓட்டம், 4 நான்கு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டத்துடன் ஷடப் கானின் பந்து வீச்சில் பாஹர் சமானிடம் பிடிகொடுத்து வெளியேறினார் (142-4).

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது. தசூன் சானக்க 27 ஓட்டத்துடனும், வசிந்து அசரங்க 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் இமாட் வஸிம், வஹாப் ரியாஸ் மற்றும் இமாட் வஸீம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.