தளபதி விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘பிகில்’ படத்தின் முன்னோட்டம் ஒக்டோபர் 12 ஆம் திகதி மாலை ஆறு மணியளவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர்  அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி இரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியாகவிருக்கும் திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜய் தந்தை மகன் என இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். உதைப்பந்தாட்ட வீரராகவும், பெண்கள் உதைப்பந்தாட்ட பயிற்சியாளராகவும் நடிக்கும் விஜயிற்கு ஜோடியாக நயன்தாரா, கதிர்,விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி,யோகி பாபு, சௌந்தரராஜா, இந்துஜா, வர்ஷா பொலம்மா, ரெபா மோனிகா ஜோன்,மனோபாலா ஆகியோருடன் பொலிவுட் நடிகர் ஜேக்கி ஷெராப்பும் நடித்திருக்கிறார்கள். ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்ககிறார்கள். 

தீபாவளி பண்டிகையன்று வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு இது வரை டீஸரும், டிரைலரும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில் படத் தயாரிப்பு நிறுவனம் படத்தின் டீஸர் அல்லது டிரைலர் வெளியிடும் திகதியை இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. 

அந்தவகையில் இன்று மாலை அந்நிறுவனத்தின் ட்வீட்டர் தளத்தில்,“ பிகில் படத்தின் டிரைலர் ஒக்டோபர் 12 ஆம் திகதியன்று வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். 

டீஸர் வெளியிடாமல் முன்னோட்டத்தை வெளியிடுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். ஒக்டோபர் 12 ஆம் திகதியன்று ரசிகர்கள் இணைய உலகைத் தெறிக்கவிடுவார்கள் என்பது மட்டும் உறுதி.

இதனிடையே விஜயயின் ‘பிகில்’ படத்துடன் கார்த்தி நடிக்கும் ‘கைதி ’ படமும்,விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத் தமிழன் படமும் வெளியாகிறது. இதனால் போட்டி இருக்கும் என்றும் தல ரசிகர்கள் இவ்விரண்டு படங்களுக்கும் ஆதரவாக இருப்பார்கள் என்பதால் விஜய் ரசிகர்கள் பிகில் படத்தினை இணையத்தில் வைரலாக்க புதிய திட்டத்தை கண்டுபிடித்திருப்பதாக விஜயின் இணைய ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.