(இராஜதுரை ஹஷான்)

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஆசிர்வாதத்துடனே வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளோம். அரசாங்கத்தின் கடந்த நான்கரை வருட நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டே நாட்டு மக்கள் அரசியல் ரீதியிலான தீர்மானங்களை முன்னெடுப்பார்கள். தேர்தலின் வெற்றியை நிச்சயம் கைப்பற்றுவோம் என எதிர்கட்சி தலைவருமான  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரங்களை இன்று தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததன் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் எவ்வித மறுப்பும் இன்றி இணக்கம் தெரிவித்துள்ளோம். சுயாதீனமான முறையில் தேர்தல் இடம்பெற்றால் மாத்திரமே நாட்டு மக்கள் தமக்கான தலைவரை தெரிவு செய்வார்கள். எந்நிலையிலும் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பாடுகளுக்கு ஆணைக்குழு இடமளிக்காது என்றும் கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த கோத்தாபய ராஜபக்ஷ,

வெற்றிகரமான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் எழுந்த அனைத்து சவால்களையும் சட்டவாயிலாகவே வெற்றிக் கொண்டுள்ளோம்.  எமது அரசாங்கத்தின் எதிர்கால திட்டமிடல்கள் முழுமையாக மக்கள் மத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது ஆட்சியில் அபிவிருத்திகள் உட்பட அனைத்து துறைகளும் பலப்படுத்தப்படும். அனைவரது ஆதரவுடன் வெற்றிப் பெறுவேன்.  இம்முறை நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த அரசியல் தீர்மானத்தை முன்னெடுப்பார்கள்.