(ஆர்.விதுஷா)

தொழில்நுட்ப வளர்ச்சியில் புத்துயிர் பெற்ற தாய் நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம் என  ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்பாக கூடியிருந்த  ஏராளமாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களின் மத்தியில்   கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

வேட்புமனு தாக்கல்  செய்த பின்னர்  ஐக்கிய தேசிய  கட்சியின்  ஜனாதிபதி  வேட்பாளரான சஜித்  பிரேமதாச அவருடைய தாயாரான   ஹேமா பிரேமதாச, அமைச்சர்களான மனோகணேசன்,  சம்பிக்க  ரணவக்க, ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான  முஜுபுர் ரஹூமான், கபீர் ஹசீம் ஆகியோர்  புடையசூழ ஆதரவாளர்கள் இருந்த  இடத்திற்கு சென்றனர். 

அதன்போது அந்த பகுதியில் கூடியிருந்த ஏராளமான ஐக்கிய தேசிய  கட்சியின் ஆதரவாளர்கள் ' வெற்றி  வெற்றி ' என கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சி  ஆரவாரங்களை  தெரிவித்தனர். பட்டாசு  வெடித்தும் கொண்டாடினர்.