சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர்  மீராநகர் கடற்கரை பகுதியில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 8.10 மணியளவில் வயோதிபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இல 70 வன்னியார் வீதி நிந்தவூர் பகுதியை சேர்ந்தவரான   முகம்மது தம்பி மீராநூர் மீராலெப்பை (வயது-73) என்பவரே தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மீது தென்னை மரக்குற்றி மூலம் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த நபரை தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் தலைமறைவாகி உள்ளதாக சம்மாந்துறை  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் பார்வையிட்டுள்ளதோடு அம்பாறை தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஏ மாரப்பனவின் நேரடி கண்காணிப்பின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரிய பண்டார  தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே இப்னு அசார் குற்றத் தரடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் றமீஸ்  ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.