பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இதன் பின்னர் இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு - 20 போட்டி நேற்றுமுன்தினம் லாகூரில் இடம்பெற்றது.

இப் போட்டியில் தனுஷ்க குணதிலக்கவின் அரைச் சதம் மற்றும் இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சு என்பவற்றின் உதவியுடன் 64 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இதன் மூலம் இலங்கை அணி, 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியை இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியொன்றில் வீழ்த்தியமை முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 

இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரின் இரண்டாவது போட்டியானது இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு லாகூரில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை இப் போட்டி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலக்க இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இருபதுக்கு - 20 போட்டியில் வெற்றிபெற கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் இன்று நடைபெறவுள்ள 2 ஆவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.