(நா.தனுஜா)

கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி நீதிமன்றம் செல்வதற்குத் தயாராக இருப்பதாக ராஜித சேனாரத்னவால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்து மக்களை முழுமையாகத் திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சியாகும். அத்தகைய பொய்யான பிரசாரங்களினால் பொதுமக்கள் ஏமாறக்கூடாது என்று அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்று தேர்தலைத் தவிர்த்து அல்லது வேறு ஏதேனும் திட்டங்களைப் பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமையைப் புறந்தள்ளுவதற்கான எந்தவொரு முயற்சியிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி நீதிமன்றம் செல்வதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டிருந்தார். 

அக்கருத்திற்கு மறுப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.