(இராஜதுரை ஹஷான்)

இனவாதிகளினால் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை  ஒருபோதும் முன்னேற்ற முடியாது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனநாயக ரீதியில் குடும்ப ஆட்சியின் அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார்.

கடந்த அரசாங்கத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் ராஜபக்ஷர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. திறமைகளின் அடிப்படையில் பதவிகள் எவருக்கும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இன்று அவர்களே   ஜனநாயகத்தின் பிறப்பிடமாக கருத்துரைக்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் திறமைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது . இதுவே என்றும் தொடரும் என்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர் கூட்டம் இன்று கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம் பெற்றது. இதன் போது கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.