(செ.தேன்மொழி)

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் தேர்தல் தொடர்பான செயற்பாட்டு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய 493 பொலிஸ் நிலையங்களிலும் செயற்பாட்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த பிரிவினூடாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் பொறுப்பேற்கப்படுவதுடன், அவை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். அதேவேளை 1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க சட்ட கோவைக்கமைய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான விதிமுறைகளை மீறுவோர் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளபடும்.

பொலிஸ் செயற்பட்டு பிரிவுகளினூடாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த தரவுகள் பொலிஸ் தலைமையகத்தில் தேர்தல் செயலகத்துடன் இணைக்கப்படும்.

தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக மேல்மாகாண மற்றும் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் செயலகத்தின் பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் அசோக்க தர்மசேன மற்றும் இதன் நிலைய பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் சரத் தி சில்வா ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.

பிரதி பொலிஸ் மா அதிபரின் தலைமையில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் உள்ளடங்களாக பொலிஸ் குழுவினர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.அதற்கமைய இந்த குழுவில் பிரதி பொலிஸ் மா அதிபர் சரத் பீரிஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஒஷான் ஹேவாவிதாரன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.