பிரித்தானிய பிரதமர் தலைமையிலான அமைச்சர்களை சந்தித்த போது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீக்க ஆதரவளிப்பதாக கூறினார்கள்
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதிகாரிகளை உடனடியாக அரசியலுக்குள் அழைத்து வருவதானது ஜனநாயகத்திற்கு கேள்விக்குறியை ஏற்படுத்துவதுடன் நாட்டிற்கும் பேராபத்தாக அமையும் சூழல் உருவாகும் என்று ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள ஸ்ரீலங்கா சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி.ரொஹான் பல்லேவத்த வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு:
கேள்வி:- நாட்டின் முன்னணி தொழிலதிபராக அடையாளம் காணப்பட்ட நீங்கள் நேரடியாக ஜனாதிபதித் தேர்தல் ஊடாக அரசியல் பிரவேசம் செய்திருக்கின்றீர்களே?
பதில்:- ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் அபரிமிதமான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனாலும் அவ்வாறான மாற்றங்கள் எவையுமே இடம்பெறவில்லை. மேலும் மோசமான நிலைமைக்குள்ளேயே நாடு சென்றிருந்தது. இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் பார்வையாளராக இருக்க முடியாது. மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தலையீடுகளை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தேன்.
அதற்காக அரசியல் அங்கீகாரம் அவசியம் என்பதையும் உணர்ந்து அதில் பிரவேசிக்கும் முடிவினை உறுதியாக எடுத்திருந்தேன். அச்சமயத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆகவே அதில் போட்டியிடும் தீர்மானத்தினை எடுத்துள்ளேன். மேலும் நாட்டினை இயக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடத்திலேயே உள்ளது. ஆகவே முக்கிய பதவியாக இருக்கும் ஜனாதிபதி பதவியின் ஊடாக நாட்டில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்பதும் எனது நிலைப்பாடாக இருக்கின்றது.
கேள்வி:- நீங்கள் எவ்வாறான மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்:- முதலில் ஒருவிடயத்தினை தெளிவுபடுத்துகின்றேன், பிரித்தானிய அரசுக்கும் எனக்கும் இடையில் தனிப்பட்ட உறவுகள் காணப்படுகின்றன. அண்மையில் தற்போதைய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்களை சந்தித்தபோது, பல்வேறு விடயங்களை கலந்துரையாடினோம். இதன்போது என்போன்ற, நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல முனையும் தலைவர்களுடன் அவர்கள் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்கள்.
அதுமட்டுமன்றி, ஆட்சி அதிகாரம் என்போன்றவர்களுக்கு கிடைக்கின்ற போது இலங்கைக்கு எதிராக எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் இல்லை என்று ஜெனீவாவில் கூறுவதற்கு கூட தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள். உத்தியோகபூர்வமாக இல்லாது விட்டாலும், தனிப்பட்ட முறையில் அவ்வாறு வாக்குறுதி அளித்தார்கள்.
அத்துடன், இந்த நாட்டினை பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான முதலீட்டாளர்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்கள். தற்போதைய ஆட்சியாளர்களால் இத்தகைய விடயங்களை முன்னெடுக்க முடியாதிருக்கின்றது. அவர்கள் ஏன் இத்தகைய தலைவர்களுடன் உரிய அணுகு முறைகளைச் செய்யவில்லை என்ற கேள்வி எழுகின்றது.
எமது தரப்பில் மூன்று வருடங்களை இலக்காக வைத்து நாட்டின் அனைத்து துறைகளையும் முன்னேற்றுவதற்கான செயற்றிட்டமொன்று நிபுணர்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை நடைமுறைசாத்தியமாக்கும் முழுமையான நம்பிக்கையுடன் தான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.
கேள்வி:- ஏனைய வேட்பாளர்களிடத்திலிருந்து வேறுபட்டிருக்கும் கொள்கைத்திட்டங்கள் பற்றி கூறுங்கள்?
பதில்:- அரிஸ்டோட்டிலிடத்தில் யார் உண்மையான ஜனாதிபதியாக இருக்க முடியும் எனக்கேட்டபோது, தத்துவஞானியொருவரே பொருத்தமானவர் என்று கூறினார். மனிதாபிமான ரீதியிலான பகுத்தறிவைக் கொண்ட ஒருவரே உயரிய ஆசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும். சாதாரண பொதுமகனின் கண்ணீரை உணர்வு ரீதியாக கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும். குடிநீர், உணவு, பசுமை பாதுகாப்பு உள்ளிட்டவை சம்பந்தமாக கூடியளவு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விடயங்களில் அக்கறை கொண்ட ஒருவரே ஜனாதிபதியாக இருக்க வேண்டும்.
இதனைவிடுத்து சட்டவாக்கத்துறையுடன் தொடர்புபட்ட கொள்கைத்திட்டத்தினை முன்னிலைப்படுத்துவதால் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. மேற்படி அடிப்படை விடயங்கள் குறித்த பட்டறிவுடனான நபர் தலைமையேற்கும் போது சட்டவாக்கத்துறை கொள்கைத்திட்டங்களை உரிய முறையில் தயாரிக்கும்.
சட்டவாக்கத்துறை வரையும் கொள்கைகளின் நன்மை தீமைகளை உணர்ந்து அவற்றை முகாமை செய்யும் அல்லது நடைமுறைப்படுத்தும் திறனை ஜனாதிபதியாகும் நபர் கொண்டிருந்தால் போதுமானது. துரதிர்ஷ்டவசமாக எமது நாட்டில் அடிப்படை விடயங்கள் பின்னிலைப்படுத்தப்பட்டு கொள்கைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் நிலைமை உருவாக்கப்பட்டது.
ஆகவே எமது நாட்டின் துரதிர்ஷ்டமான நிலைமையை உணர்ந்துகொண்டு தலைமையேற்பதற்கு தயாராகியிருக்கின்றமையே ஏனைய வேட்பாளர்களிடத்திலிருந்து வேறுபட்டிருக்கும் எனது தனித்துவமாக கருதுகின்றேன்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உடன் தீர்வு காண 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம். 4 பில்லியன் டொலர்களுக்கான உறுதிப்பாடுகளை நான் பெற்றுள்ளேன்
கேள்வி:- நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு உடன் தீர்வு காண்பதற்கு உங்களிடத்தில் எத்தகைய திட்டங்கள் இருக்கின்றன?
பதில்:- நாட்டின் பொருளாதாரத்தினை உடனடியாக சீர்செய்வதென்றால் 10பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடியாக முதலீடு செய்யப்பட வேண்டும். பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் தனிப்பட்ட முறையில் எனக்குள்ள உறவுகளைப் பயன்படுத்தி தற்போது வரையில் 4பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளேன். மீதமாக 6பில்லியன் டொலர்களே தேவையாக உள்ளன. ஆட்சி அதிகாரம் கிடைக்கின்றபோது, அதனை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். அதில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தல் களத்தில் மூன்று பிரதான தரப்புக்கள் களமிறங்கியுள்ள நிலையில் உங்களுக்கு இத்தரப்புக்களிடத்திலிருந்தும் அழைப்புகள் கிடைத்ததாக அறியமுடிகின்றதோடு இவர்களில் யார் உங்களுக்கு சவால் என்று கருதுகின்றீர்கள்-?
பதில்:- நான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்திருந்த தருணத்தில் பிரதான கட்சிகள் என்னை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்புக்களை விடுத்திருந்தன. என்னைப் பொறுத்த வரையில் இந்த தரப்புக்கள் நாட்டையும் மக்களையும் தவறான வழிகளில் கொண்டு செல்கின்றார்கள் என்பதனால் தான் கொள்கைகளை வகுத்து களமிறங்க வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டது. அவ்வாறிருக்கையில், பிரதான தரப்புகளுடன் மீண்டும் இணைவதானது கொள்கை ரீதியான நிலைப்பாடுகளை கைவிட்டு பிரபல்யத்தினை தேடிய அரசியல் செயற்பாடாகவே இருக்கும்.
ஆகவே அவர்களின் அழைப்பினை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இலங்கை வரலாற்றில் கொள்கை ரீதியான அரசியல் செயற்பாட்டாளர்கள் இருந்துள்ளார்கள். அவர்களுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளார்கள். ஆகவே பிரதான கட்சிகளின் சார்பில் பிரபல்யமாக இருக்கும் வேட்பாளர்களை தாண்டி எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செல்வதால் யாரும் எனக்கு சவாலாக இருக்கமாட்டார்கள் என்றே கருதுகின்றேன்.
கேள்வி:- 'அபிமன்ய லங்கா' அமைப்பினால் உங்களது பெயர் முதலில் முன்மொழியப்பட்டபோதும் பின்னர் முன்னாள் இராணுவத்தளபதியின் பெயரை தெரிவு செய்திருந்தார்களே?
பதில்:- 'அபிமன்ய லங்கா' என்னும் அமைப்பில் 44வரையிலான பல்வேறு துறைசார்ந்த அமைப்புக்கள் காணப்படுகின்றன. இதில் ஐக்கிய துறைசார் அமைப்பு மற்றும் தேசிய துறைசார் அமைப்பு போன்றனவும் காணப்படுகின்றன. முதலில் ஐக்கிய துறைசார் அமைப்பு செயற்பட்டு வந்திருந்த நிலையில் தான்தேசிய துறைசார் அமைப்பினை நாடளாவிய ரீதியில் செயற்படுவதற்காக நானே முன்னின்று ஸ்தாபித்திருந்தேன்.
இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி வேட்பாளராக எனது பெயரை தெரிவு செய்திருந்ததோடு கடந்த 25ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென 24ஆம் திகதி புதிய வேட்பாளராக மகேஷ் சேனநாயக்கவை அறிவிக்கப்போவதாக கூறினார்கள். ஓர் இரவில் வேட்பாளர் எவ்வாறு மாற்றப்பட்டார் என்று தெரியவில்லை.
அவ்வாறான நிலையில் நான் திட்ட மிட்டவாறு களமிறங்குகின்றேன் என்று உறுதியாக கூறிவிட்டேன். மகேஷ் சேனநாயக்கவை ஆதரித்த தரப்பினர் சுகததாஸவில் அவர்களின் அறிவிப்பினை வெளியிட்டனர். அத்துடன் நாஹனந்த கொடித்துவக்கு உள்ளிட்டவர்களும் போட்டியிடும் முடிவினை அறிவித்தார்கள். இதனால் வாக்குகளை மட்டுமே சிதைப்பதாகவும் அமைந்து உண்மையான மாற்றத்தினை எட்டமுடியாது போகலாம்.
மேலும், இராணுவத்தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்று சொற்பகாலத்தினுள் மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதானது பிழையான முன்னுதாரணமாகும். நாம் அனைவருமே சுதந்திரத்தினையும், ஜனநாயகத்தினையும் அதிகம் விரும்புபவர்களாக இருக்கின்றோம். இராணுவ அதிகாரிகளைப் பொறுத்தவரையில் உத்தரவிட்டால் அதனை செய்ய வேண்டும் மறுபேச்சிற்கே இடமில்லை. அவ்வாறிருக்கையில் அதிகாரம் அவர்களின் கைக்குச் சென்றால் நிலைமைகள் எவ்வாறு இருக்கும்.
இதனைவிடவும் தற்போதைய இராணுவத்தளபதியான சவேந்திர சில்வாவுக்கும் அரசியல் கனவுகள் இல்லாமலில்லை. இவரும் ஓய்வு பெற்ற பின்னர் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. மகேஷ் சேனநாயக்க, சவேந்திர சில்வா என இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளை உடனடியாக அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு இடமளிப்பதும், அங்கீகாரமளிப்பதும் நாட்டின் ஜனநாயக விழுமியங்களை கேள்விக்குறியாக்குவதோடு எதிர்காலத்தில் நாட்டிற்கும் பேராபத்து ஏற்படுவதற்கே அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
அதுமட்டுமன்றி பிரித்தானிய அரசாங்கம் தனிப்பட்ட முறையில் என்னுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய போது ஜனநாயக விழுமியங்களை மையப்படுத்திய நிலைப்பாடுகளையே வெளிப்படுத்தியிருந்தார்கள். இவ்வாறான பின்னணியில் மகேஷ் சேனநாயக்கவின் தரப்பில் எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பினையும் நான் நிராகரித்திருந்தேன். நான் ஒரு சிவில் பிரஜையாகவே செயற்பட விரும்புகின்றேன்.
மிக முக்கியமான சர்வதேச தரப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்புக்களின் நிலைப்பாடுகளை, சிந்தனைகளை புறந்தள்ளி இலங்கை எமது நாடு இதற்குள் எதனையும் செய்வோம் என்ற சிந்தனையில் அவர்களை புறந்தள்ளி செயற்பட முடியாது. எமது நாட்டின் எதிர்காலத்திற்கு பூகோளத்தில் உள்ள அனைத்து தரப்புக்களுடனும் கைகோர்த்தே பயணிக்க வேண்டியுள்ளது.
கேள்வி:- இராணுவத்தினை சேர்ந்தவர்களின் அரசியல் பிரசன்னத்தினை எதிர்க்கும் நீங்கள் இராணுவத்தில் கடமையாற்றியவரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகவும் இருக்கும் கோத்தாபயவின் அரசியல் பிரவேசத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- மகேஷ் சேனநாயக்க தற்போது ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியமையால் அவருடன் ஒப்பிடுகையில் கோத்தாபய மேலானவர் என்ற சிந்தனை உருவாக்கமே மக்கள் மத்தியில் எழப்போகின்றது. இதனால் பொதுமக்கள் அவரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிற்குச் செல்வதற்கான வழியையும் ஏற்படுத்துவதாக உள்ளது. இது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்கின்றமையானது கவலைக்குரியதாகின்றது.
குறிப்பாக மூன்று தசாப்த யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இலங்கை பிரஜைகளிடையே படைத்தரப்பில் சேவையாற்றியவர்களை நாயகர்களாக கொள்ளும் மனநிலையொன்று தோற்றம் பெற்றிருக்கின்றது. என்னைப்போன்று பல்லாயிரக்கணக்கான முதலீடுகளை வரவழைத்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் துறைசார்ந்த நிபுணர்களின் பங்களிப்பினை பொருட்டாக கொள்ளாத மனநிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலைமையும் துர்ப்பாக்கியமானதே.
ஆகவே பொதுமக்கள் நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கான தகுதியுடைய நபர்களை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்பற்றி விழிப்புடன் அறிந்திருக்க வேண்டியதும் அவசியமாகின்றது. ஒருமுறை ஜனநாயகத்திற்கு ஆபத்தினை ஏற்படுத்தும் இராணுவசிந்தனை தரப்புக்கள் அதிகாரத்தினை பெற்றால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று கற்பனைகூட செய்து பார்க்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கேள்வி:- தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றீர்கள்?
பதில்:- தேசிய பிரச்சினை என்பது பிரதானமாக காணப்படும் பிரச்சினையின் ஓர் அங்கமே ஆகும். ஆகவே பிரதான பிரச்சினைக்கு தீர்வினை காணாமல் அங்கமாக இருக்கும் தேசிய பிரச்சினைக்கு மட்டும் தீர்வு காண்பதால் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. உள்நாட்டில் இருக்கின்ற வளங்களை முறையாக திட்மிட்டு பயன்படுத்துகின்றபோது 10ஆயிரம் கோடியை திரட்டுவதென்பது சவாலான விடயமாகாது.
அவ்வாறான நிலைமை ஏற்படுகின்றபோது தனியாள் வருமானம் மாதமொன்றுக்கு சராசரியாக ஒருஇலட்சத்து ஐம்பதாயிரமாகிவிடும். இதனால், ஒவ்வொரு தனியாளினதும் வாழ்க்கைத்தரம் உயர்வடையும். உலக நாடுகளை முன்னுதாரணமாக கொள்கின்றபோது, மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கின்றபோது மதம், இனம், குலம் போன்ற விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படும் போக்கு குறைவாக காணப்படுகின்றது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவடைகின்றபோது இந்த விடயங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இதனால் பன்முக சமூகங்களைக் கொண்ட நாடுகளினுள் பிரிவினை அதிகரிக்கின்றது. ஆகவே இந்த விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
ஆகவே மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் தொடர்ந்தும் இனங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வு காணப்படுமாயின் அதுபற்றிய கவனத்தினை செலுத்தி கலந்துரையாடல்கள் ஊடாக தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
கேள்வி:- அடுத்து வரும் பொதுத்தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களிலும் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளீர்களா?
பதில்:- ஆம், இந்த நாட்டில் உள்ள அனைத்து தரப்புக்களையும் கூட்டிணைத்து நாடளாவிய ரீதியில் எமது தரப்பு போட்டியிடும். மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கூட்டணியமைப்பது பற்றிய பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். அது குறித்த இறுதி முடிவுகளை எதிர்காலத்தில் எடுக்கவுள்ளோம்.
நேர்காணல் : ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM