பிரான்ஸ் தலைநகர் பாரிசில் காவல்துறை தலைமையகத்தில் நால்வரை கத்தியால் குத்திகொலை செய்த நபர் இஸ்லாமிய தீவிரவாதத்தினால் ஈர்க்கப்பட்டு அதனை பின்பற்ற தொடங்கியிருந்தார் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மைக்கேல் ஹார்பொன் என்ற அந்த நபர் சலாபிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர்களுடன் தொடர்புவைத்திருந்தார் என விசாரணைகளிற்கு பொறுப்பான அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தலைமையகத்தில் தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் தனது மனைவிக்கு மதஅடிப்படையிலான  குறுஞ்செய்தியை அவர் அனுப்பினார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

2015 இல் பிரான்சில் சார்லிஹெப்டோ சஞ்சிகையின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை கொலையாளி நியாயப்படுத்தியிருந்தார் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஹார்பன் இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருந்ததுடன் தீவிரபழமைவாத இஸ்லாமிய கொள்கையை பின்பற்றும் சலாபிஸ்ட் அமைப்பை சேர்ந்தவருடன் தொடர்பை பேணினார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொலையாளி சமீபத்தில் தனது ஆடையணியும் விதத்தினை மாற்றியிருந்ததுடன் பெண்களுடனான உறவை முற்றாக துண்டித்திருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.