பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க - அவிஷ்க பெர்ணான்டோ ஆகியோரின் சிறப்பான ஆரமபத்தினால் இலங்கை அணி 165 ஓட்டங்களை குவித்துள்ளது.

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரானது முடிவடைந்துள்ள நிலையில், இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியானது இன்றைய தினம் லாகூரில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட இலங்கை அணியை பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்டெ ஆரம்பித்த இலங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க மற்றும் அவிஷ்க பெர்ணான்டோ நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

இதனால் இலங்கை அணி 5 ஓவர்களில் 50 ஓட்டங்களை பெற, அதிரடியாக துடுப்பெடுத்தாடி வந்த தனுஷ்க குணதிலக்க 7.5 ஆவது ஓவரில் ஆறு ஓட்டம் ஒன்றை விளாசித் தள்ளி அரைசதம் கடந்தார்.

தொடர்ந்தும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்த அவர் 9.4 ஆவது ஓவரில் சடப் கானின் பந்து வீச்சில் மொத்தமாக 38 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஆறு ஓட்டம் 8 நான்கு ஓட்டம் அடங்கலாக 57 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (84-1).

இலங்கை அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 84 ஓட்டங்கள‍ை குவித்ததுடன், 12 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை தொட்டது. அவிஷ்க பெர்ணான்டோ 23 ஓட்டத்துடனும், பானுக்க ராஜபக்ஷ 9 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இதன் பின்னர் 14.4 ஆவது ஓவரில் அவிஷ்க பெர்ணான்டோ மொத்தமாக 33 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க இலங்கை அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை குவித்தது.

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை குவித்தது.