தென்னாபிரக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ரோகித் சர்மான சதம் அடித்து, அசத்தியுள்ளதுடன் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 395 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி சார்பில் எல்கர், டீகொக், டு பிளசிஸின் பொறுப்பான ஆட்டத்தால்  சகல விக்கெட்டுக்களையும் இழந்து 431 ஓட்டங்கள‍ை குவித்தது.

இந்திய அணி சார்பில் அஷ்வின் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து, 71 ஓட்ட முன்னிலை பெற்ற இந்திய அணி 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, அகர்வால் களமிறங்கினர். அகர்வால் 7 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த புஜாரா  81 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அசத்திய ரோகித் சர்மா இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து 127 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். 

இறுதியில், 67 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை முடித்துக் கொண்டது.

இதனால் 395 ஓட்டங்கள் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர ஆரம்பித்த தென்னாபிரிக்க அண் இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 11 ஓட்டங்களை குவித்துள்ளது.

கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்கர் 2 ஓட்டத்துடன் ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழக்க மர்க்ரம் 3 ஓட்டத்துடனும், ப்ரூய்ன் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

நாளை போட்டியின் இறுதி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.