பாடசாலையில் பயிலும் எம்முடைய பிள்ளைகளுக்கு ஆண்டுதோறும் கண் பரிசோதனை நடைபெறுகிறது. அதன் போது வைத்தியர்கள் உங்களுடைய பிள்ளைகளின் பார்வைத்திறனை பரிசோதிக்கிறார்கள். அத்துடன் அவர்களிடத்தில் பார்வை மங்கலாகத் தெரிகிறதா? அல்லது பொருள்கள் இரண்டாகத் தெரிகிறதா? என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். ஏனெனில் மேற்கண்ட குறைபாடு உங்களுடைய பிள்ளைகளுக்கு இருந்தால் அவர்களுக்கு பைனாகுலர் பார்வை குறித்த பரிசோதனைக்கு பரிந்துரைக்கிறார்கள். 

பைனாகுலர் பார்வை பரிசோதனையா..? என வியக்கவேண்டாம். பைனாக்குலர் பார்வை என்றால், ஒரு பொருளை இரு கண்களால் பார்வையிடும் போது, ஒரே பிம்பமாகத் தெரிந்தாலும், இரண்டு கண் பார்வைக்கும் நுட்பமான வேறுபாடு இருக்கும். இரண்டு கண்களின் பார்வையையும், மூளை ஒருங்கிணைத்து ஒரே பிம்பமாகக் காட்டுகிறது. இது தான் பைனாக்குலர் பார்வை.

இரண்டு கண்களிலும் ஆரோக்கியமான பார்வை இருதால் மட்டும் தான் இவ்வாறு காண இயலும். இரண்டு கண்களின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும். அப்போது தான் ஒரு பொருளை= அதன் பிம்பத்தை கவனமாகக் காணமுடியும். எம்முடைய பிள்ளைகளில் சிலருக்கு இந்த இரண்டு கண்களும் ஒரே நேர்கோட்டில் இல்லாமல் சற்று விலகியிருக்கும். இத்தகைய பாதிப்பை கண்டுணர்ந்து சீராக்குவது தான் பைனாகுலர் பார்வை பரிசோதனை. அதாவது இரண்டு கண்களையும் ஒரே தருணத்தில் ஒரே நேர்கோட்டில் பயன்படுத்தும் திறன் குறித்த பரிசோதனை தான் இந்த பரிசோதனை. 

சில பிள்ளைகள் மாடிப்படியிலிருந்து இறங்கும் போது மற்ற பிள்ளைகளைப் போலின்றி மெதுவாக கவனமாக படியிறங்கும். மேடு பள்ளம் நிறைந்த வீதிகளில் காலணி அணிந்து நடக்கும் போது சிலருக்கு மேடு பள்ளம் என்ற வேறுபாடு தெரியாமல் இருக்கும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உங்களுடைய பிள்ளைக்கு பைனாகுலர் பார்வை இருக்கக்கூடும் என்று அவதானிக்கலாம்.

ஐந்து வயதிற்குள் இத்தகைய பரிசோதனைகளை செய்து கொண்டால் நல்லது. அத்துடன் இத்தகைய பாதிப்புகளுக்கு தற்போது சிகிச்சையும், பயிற்சியும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் முழுமையான பலனை அடையவேண்டும் என்றால் இத்தகைய பாதிப்பை எவ்வளவு விரைவாக கண்டறிகிறோமோ அந்தளவிற்கு பலனளிக்கும்.