மிகவும் ஆவலுடன் எதிர்­பார்க்­கப்­பட்ட 8ஆவது ஜனா­தி­பதித் தேர்தலுக்­கான திகதி அறி­விக்­கப்­பட்டு இரு வாரம் கடந்­துள்ள நிலையில், அர­சியல் களத்தில் தேர்தலுக்கு எஞ்­சி­யுள்ள நாட்­களில் என்ன நடக்கும் என்ற கேள்விக் கணை­க­ளோடு ­நாட்டு மக்­களும், அர­சியல் அவ­தா­னி­களும் ஒவ்­வொரு விடி­ய­லையும் எதிர்­பார்த்தே வாழ்நாளை நகர்த்­திக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். ஊட­கங்­க­ளின்பால் என்­று­மில்­லாத அக்­கறை மக்­க­ளுக்கும் அர­சியல் வாதி­க­ளுக்கும் இக்­கா­லங்­களில் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

தேர்தல் நாட்கள், மக்­களின் மனச்­சாட்­சியை பரி­சோ­திக்கும் பரீட்­சைத்­த­ளங்­க­ளாக அமை­கி­ன்றன. ஒரு மனி­தனின் மனச்­சாட்­சியே அவ­னுக்கு நீதி­பதி. அத்­த­கைய மனச்­சாட்­சியின் அடிப்­ப­டை­யி­லேயே அவ­ரவர் விரும்பும் வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்ய வாக்­கா­ளர்கள் தங்­க­ளது வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்­து­கி­றார்கள். இருப்­பினும், கடந்த ஓரிரு தசாப்­­தங்­க­ளாக தேர்தல் காலங்­களில் வாக்­கா­ளர்­களின் வாக்­கு­ரிமை விலை பேசப்­பட்­டி­ருக்­கி­றது.ஆனால், இந்தத்தேர்தல் அறி­விக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து எதி­ரணி கட்சி அர­சியல் பிர­மு­கர்கள் முன்­வைக்­கின்ற கருத்­துக்கள், அறி­விப்­புக்கள், அறிக்­கைகள் என்­ப­வற்றை நோக்­கு­கின்­ற­போது, பௌத்த, சிங்­கள மக்­களின் வாக்­குகள் தேர்தலில் இன­வா­தத்­துக்கு துணை­போய்விடுமோ என்ற அச்சம் பலர் மத்­தியில் காணப்­ப­டு­வதைச் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்கும் நிலை யில், ஒரு சில அர­சியல் கட்­சி­களும், சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் சிலரும்  நாட்டில் மீண்டும் இன முரண்­பா­டு­க­ளையும், பாது­காப்­பற்ற  சூழ்­நி­லை­யையும் உரு­வாக்கும் வகையில் வெறுப்­பூட்டும் இன­வாதக் கருத்­துக்­களை பரப்ப  ஆரம்­பித்­துள்­ள­தாக இரத்­தி­ன­புரி மாவட்ட முஸ்­லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ளனம்  தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு அவ­சரக் கடிதம் ஒன்றை அனுப்பி இருப்­ப­தையும், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவைச் சேர்ந்தோர் சிறு­பான்மை மக்­களை அச்­சு­றுத்தி தேர்தல் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­வ­தாக பிரதி அமைச்சர் பர­ண­வி­தான குற்­றச்­சாட்­டி­யி­ருப்­ப­தையும் கொண்டு இந்தத்தேர்தல் இன­வாதத்­தின்பால் வாக்­கு­களைச் சேக­ரிக்கும் நிலையை உண்­டு­ பண்­ணுமோ என்ற சந்­தே­கத்தையும் எழுப்பியுள்­ளது.

இந்­நி­லையில், இது­வரை இத்தேர்தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக 22 பேர் கட்­டுப்­பணம் செலுத்­தி­யுள்­ளனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அத்­துடன், கடந்த 2015 ஜனா­தி­பதித் தேர்தலில் வாக்­க­ளிக்கத் தகைமை பெற்ற வாக்­கா­ளர்­க­ளுடன் புதி­தாகப் பதிவு செய்­து­கொண்ட இளம் வாக்­கா­ளர்­களும் தங்­க­ளது வாக்­கு­ரி­மையை எதிர்­வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தலில் பயன்­ப­டுத்­த­வுள்­ளனர். 

வாக்­கு­ரி­மையும் தேர்தல்­களும்

வாக்­கு­ரிமை குறித்து பல்­வேறு வரை­வி­லக்­கணம் காணப்­பட்­டாலும் வாக்­க­ளிக்க தகைமை பெற்ற ஒவ்­வொரு தேசப் பிர­ஜையும் தாம் விரும்­பிய கட்சி அல்­லது வேட்­பா­ளரை பொது மற்றும் தேர்தல்­களில் தெரிவு செய்­வ­தற்குக் கிடைக்கும் உரிமை வாக்­கு­ரி­மை­யாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

பொது­வாக வாக்­கு­ரிமை, வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்­யப்­ப­டு­வதை ஒட்­டியே வரை­ய­றுக்­கப்­பட்­டாலும், குறிப்­பிட்ட அர­சியல் தீர்­வு­க­ளையும், முனைப்­புக்­க­ளையும் முன்­னி­றுத்தி நட­த்தப்­படும் பொது வாக்­கெ­டுப்­புக்­க­ளுக்கும் பொருந்தும் எனவும் கூறப்­ப­டு­கி­றது. வாக்­கு­ரி­மைக்­கான தகை­மை­களை அரசு அல்­லது அர­சி­ய­ல­மைப்பு வரை­யறை செய்­கி­றது என்­பதும் கவ­னத்­திற்­கொள்ளக் கூடி­ய­தாகும். 

இச்­சந்­தர்ப்­பத்தில், எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தலில் வாக்­க­ளிக்­க­வுள்ள வாக்­கா­ளர்­களில் இந்­நாட்டில் ஏறக்­குயை 30 வீத­மாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், கிறிஸ்­தவர், மலாயர் என்ற சிறு­பான்­மை­யி­னத்தைச் சேர்ந்த வாக்­கா­ளர்­களின் வாக்­குகள் பிர­தா­ன­மாக நோக்­கப்­ப­டு­கின்­றன. இதனை தற்­போது ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்ள வேட்­பா­ளர்­களின் கருத்­துக்­க­ளி­லி­ருந்து அவ­தா­னிக்­கலாம்.

இருப்­பினும், சிறு­பான்மை சமூ­கத்தைச் சார்ந்தோர் ஜனா­தி­பதித் தேர்தலில் போட்­டி­யிட்­டாலும் அவர்­களில் ஒரு­வ­ராலும் ஜனா­தி­ப­தி­யாக வெற்றி பெற­மு­டி­யாது.  இச்­சந்­தர்ப்­பத்தில், ஜனா­தி­பதித் தேர்தலில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக ஏற்­க­னவே அறி­வித்­துள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் போட்­டி­யி­டு­வதா இல்­லையா என்­பது தொடர்­பான தனது முடிவை இன்று 5ஆம் திகதி அறி­விக்­க­வுள்­ள­தாக ஊட­கங்­க­ளு­க்குத் தெரி­வித்­தி­ருந்தார். 

இந்­நி­லையில், பெரும்­பான்மை இனத்­தி­லி­ருந்து ஜனா­தி­பதித் தேர்தலில் போட்­டி­யிடும் ஒருவர் பெரும்­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெற்று ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கும் அவ­ரது ஸ்திர­மான ஆட்­சி­ய­மைப்­புக்கும் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களும் இன்­றி­ய­மை­யா­தவை என்­பதை கடந்தகால ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்ற தேர்தல்­களில் சிறு­பான்மை இன மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களின் வாக்­குகள் செல்­­வாக்குச் செலுத்­தி­யுள்­ள­மையை தேர்தல்­களின் பின் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆட்­சி­ய­மைப்பின் ஊடாக அறியக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

1982ஆம் ஆண்டு நடை­பெற்ற நிறை­வேற்று அதி­காரம் கொண்ட முத­லா­வது  ஜனா­தி­பதித் தேர்தலின்­போது ஐக்­கிய தேசிய கட்சி சார்பில் போட்­டி­யிட்ட மறைந்த ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன 34,50,811 வாக்­கு­களைப் பெற்று முத­லா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டார். அவர் பெற்ற 52 வீதத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களில் சிறு­பான்மை சமூ­கங்­களின் வாக்­கு­கள் கணிச­மா­னவை, தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் கொழும்பு மாவட்டம் உட்­பட வடக்கு, கிழக்கு, மலை­யக மாகா­ணங்­களை உள்­ள­டக்­கிய மாவட்­டங்­களில் வாழும் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் அவ­ருக்குக் கிடைத்­தன.

முத­லா­வது ஜனா­தி­பதித் தேர்தலின் போது கிழக்­கி­லுள்ள திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, திகா­ம­டுல்ல மாவட்­டங்­களில்  இருந்து ஐக்­கிய தேசியக் கட்­சிக்குக் கிடைக்கப் பெற்ற ஏறக்­கு­றைய 185,000 வாக்­கு­களில் கணி­ச­மான வாக்­குகள் தமிழ் மற்றும் முஸ்­லிம் மக்­களுடையவை.  அதே­போன்று, வடக்கின் யாழ்ப்­பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்­டங்­க­ளி­லி­ருந்து ஐ.தே.கட்­சிக்கு கிடைக்­கப்­பெற்ற ஏறக்­ கு­றைய 80,000 வாக்­கு­களில் சிறு­பான்மை தமிழ் மக்­களின் வாக்­குகள் அதி­கப்­ப­டி­யா­ன­வை­யாகும். 

அவற்­றுடன், அதி­க­ளவில் இந்­திய வம்­சா­வளித் தமிழ் மக்கள் வாழும்  மாத்­தளை, கண்டி, நுவ­ரெ­லியா, பதுளை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் மற்றும் கொழும்பு மாவட்­டத்தில் இருந்தும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 1982ஆம் ஆண்டு நடை­பெற்ற முத­லா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதித் தேர்தலில் அதி­க­ள­வி­லான வாக்­குகள் கிடைக்­கப்­பெற்­றன. இத்தேர்தலில் சுதந்­திரக் கட்­சியில் போட்­டி­யிட்ட ஹெக்டர் கொப்­பே­க­டுவை பெற்­றுக்­கொண்ட 25,48,438 வாக்­கு­களில் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களும் அடங்­கு­கின்­றன. அத்­துடன், ஜே.ஆர். ஜய­வர்­த­னவின் ஆட்­சியில் சில தமிழ், முஸ்லிம் உறுப்­பி­னர்கள் அமைச்­சர்­க­ளா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் இருந்­தனர் என்­பது வர­லாறு. ஜே.ஆர் ஜய­வர்­த­னாவின் ஆட்­சியில் தமிழ், முஸ்­லிம்கள் அமைச்­சர்­க­ளாக, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­போ­திலும் அவர்கள் பேரம்­பேசும் சக்­தியை இழந்­தி­ருந்­தனர் என்­பது வெளிப்படை. 

ஆர்.பிரே­ம­தா­சவின் வெற்­றியும் அஷ்ரப்பின் ஆத­ரவும்

1988 நவம்பர் மாதம் 10ஆம் திகதி நடை­பெற்ற 2ஆவது ஜனா­தி­பதித் தேர்தலின் போது ஐ.தே.க.வில் போட்­டி­யிட்ட மறைந்த ஜனா­தி­பதி ஆர். பிரே­ம­தாச 25,69,199 வாக்­கு­களைப் பெற்றார். அவர் பெற்ற வாக்­கு­களில் வடக்கு–கிழக்கு பிர­தே­சங்­களைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­களின் வாக்­கு­களும் அடங்கும்

1987ஆம் ஆண்டு ஏற்­ப­டுத்­தப்­பட்ட இலங்கை இந்­திய ஒப்­பந்தத்தின் பிர­காரம் 1988ஆம் ஆண்டு நடை­பெற்ற முத­லா­வது வட – கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது மறைந்த தலைவர் அஷ்­ரஃபின் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் 16,8,038 வாக்­கு­களைப் பெற்­றது. இந்த வாக்­கு­ ப­லத்தின் மூலம் சிறு­பான்மை சமூ­கத்­துக்­கான உரி­மை­களைப் பெற்­றெ­டுப்­ப­தற்கு சிறிமா அம்­மை­யா­ருக்கும் அஷ்­ர­ஃபுக்­கு­மி­டையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்தம் முறி­வ­டைந்­ததன் கார­ண­மாக, ஆர். பிரே­ம­தா­சா­வுக்­கான மறை­மு­க­மான ஆத­ரவை அஷ்­ர­ஃப் அன்று வழங்கினார். இதனால் வடக்கு–கிழக்கைச் சேர்ந்த முஸ்­லிம்­களின் அதி­கப்­ப­டி­யான வாக்­குகள் மறைந்த ஜனா­தி­பதி பிரே­ம­தா­ச­வுக்குக் கிடைத்­தன.

விகி­தா­சார பிர­நி­தித்­துவ தேர்தல் முறை­மையின் கீழ் ஓர் அர­சியல் கட்சி ஓர் உறுப்­பி­னரை தேர்தலி­னூ­டாக பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வெட்­டுப்­புள்­ளி­யாக இருந்த 12.5 வீதத்தை 5 வீத­மாக குறைப்­ப­தற்கு முஸ்­லிம்­களின் வாக்­குப்­ப­லத்தை மறைந்த முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃப் பயன்­ப­டுத்­தினார். ஜனா­தி­பதித் தேர்தலில் ஜனா­தி­பதி ஆர். பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு அளித்­ததன் பய­னாக இந்த வெட்­டுப்­புள்ளி குறைக்­கப்­பட்­டது. இதற்கு முஸ்­லிம்­களின் வாக்­குப்­பலம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. சிறிய தொகை வாக்­கு­களைப் பெறு­கின்ற சிறிய கட்­சி­களும் நாடா­ளுமன்­றத்­துக்கும் மாகாண சபை­க­ளுக்கும், உள்ளூர் அதி­கார சபை­க­ளுக்கும் உறுப்­பி­னர்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு அஷ்­ரஃ­ப் வழி ஏற்­ப­டுத்­தினார்.

வாக்­குப்­ப­லத்­தி­னூ­டாக, சலு­கை­களை வேண்டி நிற்­காது உரி­மை­களைப் பெறு­வ­தற்­காக, சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக, சிறு­பான்­மை­யி­ன­ருக்கு மாத்­தி­ர­மல்­லாது பெரும்­பான்மை இன அர­சியல் சிறிய கட்­சி­க­ளுக்கும்  முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபகத் தலைவர்  அஷ்­ர­ப் பெற்­றுக்­கொ­டுத்த வரப்­பி­ர­சா­த­மென இதனை வர­லாற்று ஆசி­ரி­யர்கள் குறிப்­பி­டு­கின்­றனர். 

1994ஆம் ஆண்டு நடை­பெற்ற 3ஆவது ஜனா­தி­பதித் தேர்தலின்­போது பொது­ஜன முன்­ன­ணியில்  போட்­டி­யிட்ட முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க 47,09,205 வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்டார். இந்தத் தேர்தலின்­போது வடக்கு–கிழக்கு உட்­பட நாட்டின் பல பாகங்­க­ளிலும் வாழும் சிறு­பான்­மை­யின மக்கள் கணி­ச­மான வாக்­கு­களை சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­வுக்கு அளித்­தனர். முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கா­கவும் சந்­தி­ரி­காவின் வெற்­றிக்­கா­கவும் பெரு­வா­ரி­யாக அஷ்ரஃப் தலை­மை­யி­லான முஸ்லிம் காங்­கிரஸ் உழைத்­தது.

இத்தேர்தலில் மலை­யகப் பிர­தே­சங்­களில் தமிழ்மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்ற இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸின் ஆத­ரவும் அவ­ருக்குக் கிடைத்­தது. அத­னூ­டாக பெரும்­பான்மைப் பலத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் ஆட்­சி­ய­மைக்க மறைந்த அஷ்­ர­ப்பி­னதும் அமரர் தொண்­ட­மா­னி­னதும் ஆத­ரவு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­கா­வுக்குக் கிடைத்­தது என்­பது வர­லாற்று உண்­மை­.  

1999ஆம் ஆண்டு நடை­பெற்ற 4ஆவது ஜனா­தி­பதித் தேர்தலிலும் சந்­தி­ரிகா பண்­டார­நா­யக்க குமா­ர­துங்க வெற்றி பெறு­வ­தற்கு சிறு­பான்­மை­யினக் கட்­சி­களின் தேவையும் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களும் உத­வி­யாக அமைந்­தன. 2005 மற்றும் 2010ஆம் ஆண்­டு­களில் முறையே இடம்­பெற்ற 5ஆவது மற்றும் 6ஆவது ஜனா­தி­பதித் தேர்தலில் போட்­டி­யிட்ட ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ 48,87,152 வாக்­கு­க­ளையும், 60,15,934 வாக்­கு­களையும் பெற்று இரு தேர்தல்­க­ளிலும் வெற்­றி­பெற்றார். அவ்­வா­றுதான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன 2015ஆம் ஆண்டில் நடை­பெற்ற 7ஆவது ஜனா­தி­பதித் தேர்தலில் வெற்­றி­பெ­று­வ­தற்கு சிறு­பான்மை தமிழ் முஸ்­லிம்­களின் வாக்­குப்­பலம் பல­மாக அமைந்­தது.

ஆக இந்­நாட்டில் பெரும்­பான்­மை­யி­ன­ராக பௌத்­தர்கள் வாழ்ந்­தாலும் ஆட்­சி­ய­மைப்­புக்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களின் தேவை அவ­சி­ய­மாக இருப்­பதும் அர­சியல் வர­லாற்றில் காணக்­கி­டைக்கும் யதார்த்­தங்­க­ளே. இந்த யதார்த்த நிலையை இல்­லாமல் செய்­வதற்­காக இன­வாதத்­தி­னூ­டாக வாக்­கு­களைப் பெறு­வ­தற்கு இத்தேர்தலைப் பயன்­ப­டுத்த சிலர் முயற்­சிப்­ப­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­வ­தையும் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் வெற்­றிக்கு அவ­சியம் என உணர்ந்­த­தால்தான் ஜனா­தி­பதி தேர்தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாக்­கு­களைக்  கொண்டு வெற்றி பெற முடி­யாது, தமிழ் முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­ன­தென பிர­தமர் ரணில் விக்ர­ம­சிங்க வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­விடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார். சிறு­பான்மை சமூ­கத்தின் வாக்­குகள் அவ­சி­ய­மென்­பதை பிர­தான கட்சி மற்றும் கூட்­ட­மைப்­பி­னூ­டாக கள­மி­றங்­கி­யுள்ள வேட்­பா­ளர்கள் கூறி வரு­கின்­றனர். இருந்­த­போ­திலும் ஒவ்­வொரு தேர்தல் வெற்­றியின் பின்னர் சிறு­பான்மை சமூகம் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வுகள் எட்­டப்­ப­ட­வில்லை என்­பதில் ஏமாற்­ற­மே மிஞ்சுகிறது. 

தேர்தல் வெற்­றியும் தீர்க்­கப்­ப­டாத பிரச்சி­னை­களும்

அந்நி­யரின் ஆட்­சி­யி­லி­ருந்து இந்­நாடு சுதந்­திரம் பெற்ற பின்னர் குறிப்­பாக தமிழ் மக்கள் எதிர்­நோக்­கிய கல்வி, மொழி, தொழில், காணி உட்­பட்ட பல பிரச்­சி­னை­களுக்கு அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக தந்தை செல்வா போன்ற அர­சியல் தவைர்­களால் தொடங்­கப்­பட்ட சாத்­வீகப் போராட்­ட­மா­னது ஆயுதப் போராட்­ட­மாக 1983ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் உக்­கிர­ம­டைந்து 30 வருட காலங்கள் உயிர்ப்­ப­லி­க­ளையும் இழப்­புக்­க­ளையும் இடப்­பெ­யர்­வு­க­ளையும் இன முரண்­பா­டு­க­ளையும் விடை­க­ளாக விட்­டி­ருந்த நிலையில் 2009ஆம் ஆண்டு அது எந்­த­வொரு அர­சியல் தீர்­வையும் பெற்­றுக்­கொ­டுக்­காத நிலையில் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டமை இந்­நாட்டின் அர­சியல் வர­லாற்றில் பதி­யப்­பட்­ட­வை­.

இந்­நாட்டில் வாழ்­கின்ற சிறு­பான்மை இனங்­க­ளான தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் இந்­நாடு சுதந்­திரம் அடைந்த காலம்­தொட்டு பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். அவற்ைற அர­சியல் ரீதியில் தீர்த்து வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களும், முன்­மொ­ழி­வு­களும் அவ்­வப்­போது மேற்­கொள்­ளப்­பட்­டாலும் அல்­லது அதற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டாலும் அவை இத­ய­சுத்­தி­யுடன் இடம்­பெற்­ற­னவா என்­பது கேள்­விக்­குறியே

இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்கு 2001ஆம் ஆண்டில் சர்­வ­தே­சத்தின் அனு­ச­ர­ணை­யுடன் ஐக்­கியத் தேசியக் கட்­சியின் ரணில் விக்­­ர­ம­சிங்­கவின் அர­சாங்­கத்­துக்கும் விடு­தலைப் புலி­க­ளுக்­கு­மி­டையே மேற்­கொள்­ளப்­பட்ட புரிந்து­ணர்வு ஒப்­பந்­தமும் 2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ரந­ாயக்க குமா­ர­துங்­க  முன்­வைத்த பொதுக்­கட்­ட­மைப்­பு­ திட்­டமும் கைகூ­ட­வில்லை. இதற்­கான முன்­னெ­டுப்­புக்கள் சந்­தே­கங்கள் இன்றி இத­ய­சுத்­தி­யுடன் முன்­ந­கர்­தப்­ப­ட­வில்லை என்­பதே அர­சியல் அவ­தா­னி­களின் கருத்­தா­க­வுள்­ளது.

எந்­த­வொரு பிரச்­சி­னைக்­கு­மான தீர்வைப் பெற்­றுக்­கொள்ள அப்­பி­ரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் நல்ல மனப்­பாங்­கோடு, நேர்சிந்­த­னை­யோடு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­போது அவை நிச்சயம் வெற்­றி­ய­ளிக்கும். மாறாக அந்­ந­கர்­வுகள் சந்­தே­கத்­துடன் நகர்த்­தப்­ப­டு­மாயின் அவை தோல்­வி­யி­லேதான் முடி­வுறும். உலக வர­லாற்றில் இவற்றுக்கு பல அத்­தாட்­சிகள் இன்னும் உதா­ர­ணங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.

இச்­சந்­தர்ப்­பத்தில் சிறு­பான்­மை­யி­ன­ரான தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் இரு சமூ­கங்கள் சார்ந்த பிரச்­சி­னை­களைத் தனியே நின்று அவற்­றுக்­கான தீர்­வு­களை உரிய தரப்­பி­ட­மிருந்து பெற்­றுக்­கொள்­வ­திலும் பார்க்க, கூட்­டாக ஒன்­று­பட்டு ஒரு பொது உடன்­பாட்டின் கீழ் அவற்றைப் பெற்­றுக்­கொள்ள இந்த ஜனா­தி­பதித் தேர்தலை சரி­யாகப் பயன்­ப­டுத்த வேண்டும் என்­பது இரு சமூக ஆர்­வ­லர்கள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கருத்­தா­கவுள்­ளது. 

கடந்த வாரம் நடை­பெற்ற ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்­வின்­போது இத்­த­கைய கருத்­துக்களை நகர சபையின் தமிழ் மற்றும் முஸ்லிம் நகர சபை உறுப்­பி­னர்­க­ள் தெரி­வித்திருந்தனர். இந்­நி­லையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களைத் தாய­ரிப்­பதில் கட்­சிகள் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வரு­கின்ற தக­வல்­களும் வெளியா­கி­யுள்­ளன. இச்­சந்­தர்ப்­பத்­தில்,வாக்­கு­ரி­மையின் பலத்­தை நிரூ­பிக்க வேண்­டிய  தேவை தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்­களுக்கு உள்ளது.   

வாக்­குப்­ப­லமும் வாழ்­வு­ரி­மை வெற்­றியும்

2012ஆம் ஆண்­டுக்­கான சனத்­தொகைப் புள்­ளி­ வி­ப­ரங்­களின்படி 20,263,723 மக்கள் தொகையை இந்­நாடு கொண்­டுள்­ளது. இவர்களில் 14,222,884 பௌத்­தர்­களும், 25,54,606 இந்­துக்­களும், 19,67,227 முஸ்­லிம்­களும் 15,09,606 கிறிஸ்­த­வர்­களும் 9,440 ஏனை­யோரும் உள்­ளனர். ஆக, ஏறக்­கு­றைய 13 வீதம் வாழ்கின்ற தமி­ழர்கள் மத்­தி­யி­லி­ருந்தோ அல்­லது ஏறக்­கு­றைய 10 வீதம் வாழு­கின்ற முஸ்­லிம்கள் மத்­தி­யி­லி­ருந்தோ ஒரு ஜனா­தி­பதி வர முடி­யாது. 70 வீதம் வாழ்­கின்ற பௌத்த மக்கள் மத்­தியில் இருந்­துதான் இந்­நாட்டு ஜனா­தி­பதி தெரிவு செய்­யப்­பட முடியும்.

இந்­நி­லையில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தலில் யாரோ ஒரு­வரைத் தெரிவு செய்­யவும் அவரை ஜனா­தி­ப­தி­யாக்­கவும் ஏறக்­கு­றைய ஒரு கோடியே 55 லட்­சத்­துக்கும் மேற்­பட்டோர் வாக்­க­ளிக்­க­வுள்­ளனர். இதில் சிறு­பான்மை சமூ­கத்­தினர் யாரை ஆத­ரிப்­பது என்ற கேள்வி சிறு­பான்மை மக்கள் மத்­தியில் உள்ள நிலை­யில், சிறு­பான்மை மக்கள் இந்­நாட்டில் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு காலங்­க­டத்­தாது இந்தத் தேர்தலின் பின்­ன­ரா­வது தீர்­வுகள் கிடைக்க வேண்டும். தீர்வைப் பெற்றுத் தரு­வ­தாக எழுத்து மூலம் உறு­தி­ய­ளிக்­கின்­ற­வரை வெற்றி பெறச் செய்­வ­தற்கு தமது வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்த வேண்டும் என்ற கருத்­துக்கள் பல­மாக சிறு­பான்மை மக்கள் மத்­தி­யி­லி­ருந்து எழுந்த வண்ணம் உள்­ளன.  

இந்­நி­லை­யில்­தான், நடை­பெ­ற­வுள்ள  ஜனா­தி­பதித் தேர்தலுக்­காக பிர­தான கட்சி அல்­லது கூட்­ட­மைப்­புக்­களின் வேட்­பா­ளர்­களால் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் வேட்பு மனுத்­தாக்கலின் பின்னர் வெளியி­டப் ­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அபி­வி­ருத்திக் கொள்­கைகள், அபி­வி­ருத்தி யோச­னைகள், பொரு­ளா­தாரத் திட்­டங்கள், அர­சியல் விட­யங்கள், உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களைத் தாங்­கி­ய­தாக தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் அமை­யு­மென நம்­பப்­ப­டு­கி­றது. 

தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தமிழ்மக்­களின் பிரச்­சி­னைக்­கான தீர்வை முன்­வைக்க வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்க மற்றும் வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­வு­ட­னான சந்­திப்­பின்­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர். சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார். இவ்­வேளை, தமிழ்மக்­க­ளுக்கு தரப்­போவதை சஜித் வெளிப்­ப­டை­யாகக் கூற வேண்­டு­மென தமிழ்மக்கள் கூட்­ட­ணியின் தலைவர் விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

இச்­சூ­ழலில், பதிவு செய்­யப்பட்ட முஸ் லிம் அர­சியல் கட்சித் தலை­மை­களும், சில சிவில் அமைப்­புக்­களும் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளிடம் சமூ­கம்­சார்ந்த எத்­த­கைய நிபந்­த­னை­களை முன்­வைத்­துள்­ளனர் என்­பது வெளிச்­சத்­துக்கு வராத நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் குழு ஐக்கியத் தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளதுடன் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் எடுத் துரைத்துள்ளனர். இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட விடயமாகவுள்ளது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவை ஆதரிக்கவுள்ளது.இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என தேசிய காங்கிரஸ் தெரிவித்துள்ளபோதிலும்  தேசிய காங்கிரஸ் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்கும் என அக்கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவை தவிர, பதிவு செய்யப்படாத முஸ் லிம் கட்சிகள் மற்றும் அமைப்புக்களும் வெவ்வேறு நிலைப்பாட்டுடன் விரும் பும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. இந்நிலை, நெருக்கடியைச் சந்தித்துள்ள முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை பலவீனப்படுத்தும் என்பதோடு வாழ்வுரிமையின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் என்பது சிந்திக்கப்பட வேண்டியதே.

இந்நிலையில் முஸ்லிம் சமூகம் அபிவிருத்தியை விடவும் நிம்மதியான வாழ்வையே எதிர்பார்க்கிறது. முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கும் நிம்மதியான வாழ் வைப் பெற்றுக்கொடுப்பதற்கு எங்கள் மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும். முஸ்லிம்களின் நிம்மதிக்குக் குந்தகம் விளைவிக்க நினைக்கும் இவர்களுக்கு எதிராக வாக்குகள் ஒன்று திரட்டப்பட வேண்டும். அதற்காக ஒன்றுபட வேண்டுமென்ற அழைப்பை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ளார். 

சிறுபான்மை சமூகங்களின் வாழ்வு ரிமையில் விளையாடிக்கொண்டிருக்கும் கடும்போக்காளர்களின் இனப்பாகுபாடு களைக் கடந்து இந்த நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் தங்களது சமூக சமய அரசியல், கல்வி, கலாசார தொழில், பொருளாதார, மொழிசார்ந்த உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட வேண்டியது அவசியம். அவற்றை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கான உரிய அம்சங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கப்படுமா? அவை நிறைவேற் றப்படுமா? இத்தகைய எதிர்பார்ப்புடன் வாழ்வுரிமையை காக்க, வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டியது இன்றி யமையாதது.