-ஸ்ரான்லி ஜொனி

கம்யூனிஸ்ட் புரட்சியின் 70 வருடநிறைவைக் குறிக்குமுகமாக பெய்ஜிங் நகரின் தியனென்மென் சதுக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ( 1/10 ) இடம்பெற்ற பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புக்கு தலைமைதாங்கிய சீன ஜனாதிபதி சி ஜின்பிங் " எமது மகத்தான தாய்நாட்டின் அந்தஸ்தை அசைக்கவல்ல சக்தி எதுவும் இல்லை " என்று பெருமதத்துடன் கூறினார். சீனாவின் இராணுவ வலிமை காட்சிப்படுத்தப்பட்ட இந்த அணிவகுப்பும் " தலைசிறந்த புத்திளமையூட்டலை " நோக்கிய சீனாவின் பயணத்தை அழுத்திக்கூறிய  ஜனாதிபதியின் உரையும் நாட்டின் மீதான கம்யூனிஸ்ட் கட்சியின் இறுக்கமான பிடியையும் தலைவரின் அதிமுதன்மையான அந்தஸ்தையும் தெளிவாக வெளிக்காட்டின.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் குறிப்பாக, டெங் சியாவோபிங் பொருளாதாரத்தை திறந்துவிட்டதன் பின்னரான கடந்த 40 வருடங்களில் நாடு பாரிய பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. அமெரிக்க டொலர்களின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக சீனா இப்போது விளங்குகிறது.புரட்சிக்கு பிறகு இரு வருடங்கள் கழித்து 1952 ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரத்தின் அளவு 30.55 பில்லியன்  டொலர்களாக இருந்ததென்றால், 2018 ஆம் ஆண்டில் 13.6 ரில்லியன் டொலர்களாக வளர்ச்சி கண்டிருந்தது. 1952 ஆம் ஆண்டில் நிகர உள்நாட்டு உற்பத்தி தனிநபர் வருமானம் 54 டொலர்களாக இருந்தது.அது கடந்த வருடம் 10,200 டொலர்களாக உயர்ந்து நின்றது.

 சீனா நகர்ப்புற வறுமையை பெரும்பாலும் ஒழித்துவிட்டது. உலக வங்கி வெளியிட்ட விபரங்களின்படி பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு சுமார் 85 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். 1981 ஆம் ஆண்டில் 88 சதவீதமாக இருந்த உத்தியோகபூர்வ வறுமை வீதம் 2015 ஆம் ஆண்டில் 0.7 சதவீதமாக வீழ்ச்சி கண்டது.2020 ஆம் ஆண்டளவில் முழுமையான வறுமையை ஒழித்துக்கட்டுவதை இலக்காகக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. இன்று சீனா ஒரு கைத்தொழில் வலிமைமிக்க நாடாகவும் உயர்தரமான தொழில்நுட்பங்களில் ஒரு தலைமை நாடாகவும் விளங்குகிறது.1949 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்துக்கு வந்தபோது பிரதானமாக விவசாய பொருளாதாரத்தைக் கொண்டிருந்த வறிய நாடாக இருந்த சீனாவில் இதையெல்லாம் நினைத்துப்பார்த்திருக்கவே முடியாது. சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தையும் விட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதலான காலம் ஆட்சியதிகாரத்தில் தொடருகிறது. கம்யூனிஸ்ட் ஆட்சியின் 69 வது வருடத்தில் சோவியத் யூனியன் வீழ்ச்சி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 இத்தகைய சாதனைகளை எல்லாம் சி ஜின்பிங்கும் அவரது கட்சியும் கொண்டாடுகின்ற அதேவேளை, அவரது ஆட்சி இன்று நிலைமாறுகால சவால்களையும் எதிர்நோக்குகிறது. அந்த சவால்கள் பொருளாதாரம்,அரசியல்,  பூகோள அரசியல் என்று மூன்று வகைப்பட்டவையாகும்.

 

பொருளாதாரம்

மலிவான சம்பளத்துக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் உலகமயமாக்கம் தொடக்கம் அரச திட்டமிடல் வரையான பல்வேறு காரணிகள் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவின. உலகமயமாக்கமும் சுதந்திர வர்த்தகமும் நெருக்கடிக்குள்ளாகியதை அடுத்து சீனாவில் மலிவான சம்பள தொழிலாளர் யுகம் முடிவுக்கு வந்தது ; ஏற்றுமதியில் தங்கியிருந்த சீனப் பொருளாதாரம் மந்தநிலையடைந்திருக்கிறது.2019 இரண்டாவது காலாண்டில் சீனப் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருந்தது ; 27 வருடங்களுக்கும் அதிகமான காலத்தில் மிகவும் மந்தகதியிலான வளர்ச்சியாக இது அமைந்தது.2008 உலக பொருளாதார நெருக்கடிக்கு பிறகு சீன திட்டமிடலாளர்கள் தங்களது கவனத்தை ஏற்றுமதிகளில் இருந்து உள்நாட்டு நுகர்வுக்கு திருப்பினர்.2008 ஆம் ஆண்டில் நிகர உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதிகளின் பங்கு உச்சநிலையில் ( 36.04 சதவீதம் ) இருந்தது.அது பிறகு வீழ்ச்சிகாணத் தொடங்கிய போதிலும், சீனா இன்னமும் உலக பொருளாதாத்தின் மீது ( 2016 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு பெரும்பாலும் 20 சதவீதமாக இருந்தது ) தங்கியிருக்கிறது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் சீனாவைக் கடுமையாக பாதித்திருக்கிறது ; அதன் கைத்தொழில் வளர்ச்சி கடந்த ஜூலையில் 4.8 சதவீதமாக இருந்தது.இது 17 வருடகாலத்திற்குப் பிறகு அவதானிக்கப்பட்ட கடுமையான வீழ்ச்சியாகும்.திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய பின்னர் கடுமையான பொருளாதார மந்தநிலைகளில் ஒன்றை சீனா இப்போது அனுபவிக்கின்றது என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.உலக பொருளாதாரம் நிலையுறுதியற்றதாகவும் இடர்பாட்டுக்குள்ளாகக் கூடியதாகவும் இருக்கின்ற ஒரு நேரத்தில் 140 கோடி மக்களுக்கு உயர் பொருளாதார வளர்ச்சியையும் சுபிட்சத்தையும் தொடர்ந்து நிகழ்த்திக்காட்டவேண்டிய சவால் சி ஜின்பிங்கிற்கு முன்னால் இருக்கிறது.

   பூகோள அரசியல்

 "பலத்தை மறைத்து வைத்துக்கொண்டு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கவேண்டும் "(Hide your strength and bide your time ) என்று டெங் சியாவோபிங்கின் பிரபல்யமான கூற்று ஒன்று இருக்கிறது.அதுவே பல தசாப்தங்களாக சீனாவின் வெளியுறவுக்கொள்கையை பெரும்பாலும் வரையறை செய்தது. பொருளாதார அபிவிருத்தி மீது கவனத்தைக் குவித்திருந்த அதேவேளை, சீனா " அமைதியாக " ஆசியாவில் ஒரு பிராந்திய வ்லரசாகவும் வளர்ச்சி கண்டது.ஆனால், அந்த " அமைதியான வளர்ச்சி " யுகம் முடிவுக்கு வந்துவிட்டது.

 பெரிய வல்லாதிக்க நாடு என்ற அந்தஸ்தை பெற்றுவிட்ட சீனா இனிமேலும் அதன் பலத்தை மறைக்கமுடியாது. சீனாவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஏற்கெனவே பூகோளஅரசியல் பதற்றநிலைகளை மூளவைத்திருக்கின்றன.உதாரணத்துக்கு அமெரிக்காவுடனான உறவுகளைப் பார்ப்போம்.1972 ஆம் ஆண்டில் ஜனாதிபதி றிச்சர்ட் நிக்சன் சீனாவுக்கு மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்துக்குப் பிறகு அமெரிக்க -- சீன உறவுகள் சகஜநிலைக்கு வந்தன.சீனா பொருளாதாரத்தை தாராளமயமாக்கியபோது அமெரிக்காவுடனாான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் ஆழமாகின. அரசியல் வேறுபாடுகள்  கூட இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத் தோழமையைச் சேதப்படுத்தவில்லை.ஆனால், இப்போது அமெரிக்காவும் சீனாவும் ஏட்டிக்குப்போட்டியாக இறக்குமதிகள் மீது கூடுதலான வரிகளை விதித்து ஒரு " வரிவிதிப்புப் போரில் " ஈடுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதனால் இரு நாடுகளினதும் பொருளாதாரங்களும் உலக பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.

தென்சீனக்கடல் பிராந்தியத்திலும் பதற்றம் அதிகரித்திருக்கிறது.அந்த பிராந்தியம் தனக்குரியது என்று சீனா உரிமைகோருகின்றது.ஆனால், அமெரிக்காவும் பிராந்திய நாடுகளும் அதை எதிர்க்கின்றன.பராக் ஒபாமா " ஆசியாவுக்கு முக்கியத்துவம் " என்பதை தனது வெளியுறவுக் கொள்கையின் மையப்பொருளாக்கினார்.சீனாவை எதிர்த்து நிற்பதற்காக  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஏறத்தாழ அதே கொள்கையையே தொடருகிறார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கிடையிலான " ஒத்துழைப்புடனான போட்டி " ( Cooperative Competition)இப்போது " எதிர்முகமான போட்டி " ( Confrontational  Competition ) என்ற கட்டத்திற்குள் பிரவேசித்திருக்கிறது. பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருக்கின்ற ஒரு நேரத்தில் அதைக் கையாளுவது சி ஜின்பிங்கிற்கு மிகவும் கடுமையான பணியாகும்.

 அரசியல் கடந்த செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கில் மிகவும் உறுதியான உரையை ஜனாதிபதி நிகழ்த்திய பிறகு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை பொலிசார் மார்பில் சுட்டனர். ஹொங்கொங் பல மாதங்களாக கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.ஆவேசமான ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முற்றிலும் இயலாததாக அந்த நகரின் அரசாங்கம்்இருக்கிறது.

 உத்தேச நாடுகடத்தல் சட்டமூலம் ஒன்றுக்கு எதிரான போராட்டமாக தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் இப்போது அரசியல் சீர்திருத்தங்களுக்கும் " விடுதலைக்குமான " வன்முறை இயக்கமாக உருமாறியிருக்கின்றன. சீனாவின் ஆட்சிப்பொறுப்பைக் கையேற்ற பிறகு ஜனாதிபதி சி ஜின்பிங் முகங்கொடுக்கின்ற மிகப்பெரிய சவாலாக ஹொங்கொங் ஆர்ப்பாட்டங்கள் விளங்குகின்றன. சின்ஜியாங் மாகாணத்தில் " தொழிற்கல்வி முகாம்கள் " அல்லது " "மீள்கல்வி முகாம்கள் " என்ற பெயரில் சுமார் பத்து இலட்சம் உய்குர் இனத்தவர்களை சீன அரசாங்கம் தடுத்துவைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவையெல்லாம் தீவிரவாதப்போக்கில் இருந்து உய்குர் இனத்தவர்களை விடுவிப்பதற்கான முகாம்கள் என்று சீனா கூறுகிறது.ஆனால், அந்த தடுத்துவைப்பு உலகளாவிய ரீதியில் பெரும் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது. அந்த முகாம்களை " இந்த நூற்றாண்டின் கறை " என்று அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ வர்ணித்திருக்கிறார்.

அடுத்த தலாய் லாமாவை தெரிவுசெய்வது இன்னொரு பெரிய சவாலாக இருக்கக்கூடும்.பெய்ஜிங் ஒரளவுக்கு செல்வாக்கு செலுத்தக்கூடிய வகையில் அடுத்த தலாய் லாமா திபெத்தில் இருந்தே வரவேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது. இந்த அரசியல் பிரச்சினைகள் எல்லாம் " எதிர்ப்புரட்சியாக " மாறுவதை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை.ஆனால், அவற்றை குறிப்பாக, தீவிரமடைகின்ற ஹொங்கொங் நெருக்கடியை  கையாளுவதற்கு சி  ஜின்பிங் கடைப்பிடிக்கப்போகின்ற அணுகுமுறை  சீனா மீதான கம்யூனிஸ்ட் கட்சியின் இறுக்கமான பிடியில் நிலையான தாக்கத்தைக் கொண்டிருக்கக்கூடும்.

 ( த இந்து )