அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 09 ஆம் திகதி புதன்கிழமை வரை இடம்பெறவுள்ளது. 

அதன்படி கடந்த 29 ஆம் திகதி கணபதி ஹேமமும், இரவு 8.36 மணியளவில் அம்மன் திருக்கதவு திறத்தலும், அதனைத் தொடர்ந்து அபிஷேகப் பூசைகளும் ஆராதனைகளும் இடம்பெற்றுள்ளது.

30 ஆம் திகதி அபிஷேக அலங்காரப் பூஜைகளும் ஆராதனைகளும் இடம்பெற்றுள்ளதுடன், இம் மாதம் முதலாம் திகதி இரவு அபிஷேக அலங்காரப் பூஜைகளுடன் அம்மன் உள் வீதி வலம் வருதலும் இடம்பெற்றுள்ளது.

 2 ஆம் திகதி அபிஷேக அலங்காரப் பூஜைகளுடன் அம்மன் வெளி வீதி வலம் வருதல் நிகழ்வும், 3 ஆம் திகதி காலை அலங்காரப் பூஜைகளுடன் பிரதான வீதிகளின் ஊடாக அம்மனின் சிறப்பு வருடாந்த அலங்காரத் தேரோட்டமும், எமது பிரதேச வாழ் இளைஞர்களின் பகல் பூஜையும் அத்துடன் மாலை மாவிளக்குப் பூஜையும் அதனைத் தொடர்ந்து அபிஷேக அலங்காரப் பூஜைகளுடன் இரவு அம்மன் வெளிவீதி வலம் வருதலும் இடம்பெற்றது.

இதேவேளை 4 ஆம் திகதி காலை பாற்குட பவனியும், இரவு மக்கள் முற்போக்கு சங்கத்தினரின் அபிஷேக அலங்காரப் பூஜைகளுடன் அம்மன் வெளிவீதி வலம் வருதலும் இடம்பெற்றது.

இதேவளை 05 ஆம் திகதி சனிக்கிழமை அபிஷேக அலங்காரப் பூஜைகளுடன் அம்மன் வெளி வீதி வலம் வருதலும், 06 ஆம் திகதி அக்கரைப்பற்று பழைய அம்மன் ஆலயத்திலிருந்து விரகம்பம் வெட்டுதல், வாழக்காய் நேர்தலும், அதனைத் தொடர்ந்து இரவு அபிஷேக அலங்காரப் பூஜைகளுடன் வச்சிக்குடா பகுதி நோக்கிய அம்மன் சிம்மரத பவனி வலம் வருதலும் இடம்பெறும்.

07 ஆம் திகதி அபிஷேக அலங்காரப் பூஜைகளுடன் அம்மன் பிரதான வீதிகளினூடாக சிம்ம வாகன ரதபவணி வலம் வருதலும் இடம்பெறுவதுடன் 08 ஆம் திகதி ஸ்ரீ மருதயடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து நோர்ப்பு நெல் எடுத்தலும், அதனைத் தொடர்ந்து சக்தி மகாயாகமும், நோர்ப்புக் கட்டுதலும், கடற்குளிப்பும் அன்று இரவு மாகாளிக்கு விசேட பூஜைகளும் இடம்பெறும்.

இதேவேளை விழாவின் இறுதி நாளான 09 ஆம் திகதி புதன்கிழமை காலை 7.00 மணியளவில் மஞ்சள் குளிப்பதை தொடர்ந்து, பக்தி ததும்பும் தீ மிதிப்பும், ஆயுத பூஜைகளும், வழிபாடுதலுடன் கிரியைகள் யாவும் இனிதே நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.