உடற்பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் தங்களின் உடல் எடையை குறைப்பதற்காக மருத்துவர்களையும், ஊட்டசத்து நிபுணர்களையும், உடற்பயிற்சி ஆலோசனைகளையும் சந்தித்து, அவர்கள் கூறும் அறிவுரையை ஏற்று, உடல் எடை குறைப்பில் ஈடுபடுகிறார்கள். 

ஆனால் அதே தருணத்தில் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும் சுவையான உணவுகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. இதனால் உங்களது எடைகுறைப்பு முயற்சி உரிய பலனை அளிப்பதில்லை என்கிறார்கள் உடல் பருமனுக்கான சிறப்பு சிகிச்சை நிபுணர்கள்.

உடல் பருமன் ஏன் ஏற்படுகிறது? என்பதை தெரிந்து கொண்டால் அதனை குறைப்பது எளிது என்கிறார்கள் வைத்தியர் நிபுணர்கள். அத்துடன் எம்முடைய உடல் இயங்குவதற்கான ஆற்றல் உணவிலிருந்து தான் அதிகளவில் பெறப்படுகிறது. 

அதிலும் குறிப்பாக கொர்போஹைட்ரேட் சத்து, கொழுப்புச் சத்து மற்றும் புரத சத்து ஆகிய மூன்று வகையினதான வழிகளில் தான் உடலுக்குத் தேவையான சக்தி பெறப்படுகிறது. இதனை எம்முடைய உடலிலிருக்கும் இன்சுலின் மற்றும் லெப்டின் எனப்படும் இரண்டு சுரப்பிகள் உதவி செய்கின்றன.

ஒருவர்  உட்கொள்ளும் கொர்போஹைட்ரேட் சத்து, உட்கொண்டவுடன் உடலுக்குள் சென்று, இன்சுலினை தூண்டி, சக்தியாக மாற்றி, தேவையான அளவிற்கு உடலுக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ளவற்றை கொழுப்பாக மாற்றப்பட்டு, உடலின் சில பகுதிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. இவற்றில் நார் சத்து ஏதுமில்லாத காரணத்தினால் கெட்ட கொழுப்பாகவே சேமிக்கப்படுகின்றன.

நீங்கள் உட்கொள்ளும் கொர்போஹைட்ரேட் சத்துள்ள உணவுப் பொருள்கள், இன்சுலின் சுரப்பியை இயல்பான அளவைவிட அதிக அளவில் தூண்டச் செய்கிறது. இதன் காரணமாகத் தான் இரண்டு மணித்தியாலத்திற்கொரு முறை பசி எடுக்கிறது.

பசி எடுத்தவுடன் மீண்டும் கொர்ப்போஹைட்ரேட் சத்துள்ள உணவுப்பொருளைத்தான் உட்கொள்கிறார்கள். நாளடைவில் இந்த சுரப்பி கொர்போஹைட்ரேட் சத்தை, ஆற்றலாக மாற்றுவதற்குரிய இன்சுலினை சுரப்பதில் இயல்பான நிலைக்கு மாறாக செயற்படத் தொடங்குகிறது. 

அதாவது சுரக்கும் இன்சுலின் வீரியமற்றதாகவோ அல்லது தரமற்றதாகவோ இருப்பதால் கெட்ட கொழுப்பு அதிக அளவில் சேர தொடங்குகிறது. இவையே தொற்றா நோய்களான நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளை உருவாக்கு கின்றன. அத்துடன் உடல் பருமனையும் ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் உடல் பருமனை குறைக்க லெப்டின் டயட் எனப்படும் உணவு முறையை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இத்தகைய உணவு முறையில் நாளொன்றுக்கு மூன்று வேளை தான் உணவினை உட்கொள்ள வேண்டும். 

அதில் குறிப்பாக காலை உணவில் 20 முதல் 30 கிராம் அளவிற்கு புரத சத்துள்ள உணவினை  உட்கொள்ள வேண்டும். இரவு உணவிற்கு பின்னதாக எதனையும்  உட்கொள்ளவோ, பருகவோ கூடாது. படுக்கை அறைக்கு செல்லும் மூன்று மணித் தியாலத்திற்கு முன்னதாக நீங்கள் இரவு உணவை முடித்திருக்க வேண்டும். 

நீங்கள் உட்கொள்ளும் காலை உணவில் இருந்து ஐந்து அல்லது ஆறு மணி தியாலம் வரை ஓய்வு கொடுத்த பின்னரே  அடுத்த உணவினை  உட்கொள்ள வேண்டும். அதாவது காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் 5 மணித்தியாலம் காலஅவகாசம் இடம்பெற்றிருக்க வேண்டும். 

இந்நிலையில் இடையிடையே நொறுக்குத்தீனிகளை சிறிதும் உட்கொள்ள கூடாது. அதேபோல் நீங்கள் உட்கொள்ளும் எந்த உணவிலும் கொர்போஹைட்ரேட் சத்தினை அதிக அளவில் எடுக்க கூடாது. இத்தகைய உணவு முறையை நீங்கள் பின்பற்றினால் உங்களுடைய எடை குறைந்து. உங்களுடைய உயரத்திற்கு ஏற்ற அளவு எடை இருக்கும்.