அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  பதவிக்கு வந்த நாள் முதல் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகிவந்திருக்கிறார். தற்போது இன்னொரு சர்ச்சைக்குள் அவர் சிக்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் ஒருவர் ட்ரம்புக்கும் உக்ரெயின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கிக்கும் இடையே ஜூலை 25 இடம்பெற்ற தொலைபேசிக் கலந்துரையாடலின் அச்சுப்பிரதி தொடர்பில் செய்த ஒரு முறைப்பாடே சர்ச்சைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.தனது சொந்த அரசியல் நலன்களுக்காக ட்ரம்ப் வேண்டுமென்றே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.

அந்த கலந்துரையாடலில் அமெரிக்க ஜனாதிபதி தனது அரசியல் போட்டியாளரான  முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பிடெனையும்  உக்ரெயினில் வர்த்தக நலன்களைக் கொண்ட அவரின் மகன் ஹன்டர் பிடெனையும் விசாரணைக்குட்படுத்துமாறு செலென்ஸ்கியிடம் திரும்பத் திரும்ப கேட்டிருப்பது  தெரியவந்திருக்கிறது.

2020 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பிடென்  களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கான  தனது வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்காக ட்ரம்ப், பிடென் மீது சேறுபூச திட்டமிடுகின்றார் என்பதை தொலைபேசி கலந்துரையாடல் மறைமுகமாகத் தெரிவிக்கிறது.

அமெரிக்கா உக்ரெயினுக்கு எவ்வளவை  செய்கிறது ; மேலும் எவ்வளவைச் செய்யமுடியும் என்பதை செலென்ஸ்கிக்கு ஜனாதிபதி ட்ரம்ப் திரும்பத் திரும்ப  நினைவுபடுத்துவதை கலந்துரையாடலில் கேட்கக்கூடியதாக இருக்கிறது. 

உக்ரெயினுக்கு அமெரிக்கா  வழங்கும் உதவிகளையே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் என்பது தெளிவானது.அந்த நாட்டுக்கான சுமார்  25 கோடி டொலர்கள் இராணுவ உதவிகளை ட்ரம்ப் நிருவாகம் நிறுத்திவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தான் கேட்பதை செய்வதற்கு உக்ரெயின் ஜனாதிபதி செய்யத்தவறினால், அந்த உதவி விடுவிக்கப்படமாட்டாது என்று அவருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை செயகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ட்ரம்ப் எவற்றையெல்லாம் செய்யத்தயாராக இருக்கிறார் என்பதை இது வெளிக்காட்டுகிறது.

இது உண்மையில் இரு புதிய விடயமும் அல்ல.2016 ஆம் ஆண்டில்  ட்ரம்பின் பிரசாரங்களுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகள் ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய அரசாங்க அதிகாரிகள் தலையிடுவதற்கு வசதியாக அவர்களுடன் சேர்ந்து சதி வேலைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளின்டனின் மின்னஞ்சல்களை ரஷ்ய அதிகாரிகள் வேவுபார்த்து ட்ரம்புக்கு உதவுவதற்கு தகவல்களை வெளியிட்டதாக பெரும் சர்ச்சை மூண்டது.

இத்தடவை ட்ரம்ப் தான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றின் உதவியை நாடியது மாத்திரமல்ல, தனது நலன்களுக்காக ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்துவதற்கு  முனைந்துநிற்பதையும்  காணக்கூடியதாக இருக்கிறது. 

ரஷ்யர்கள் தலையீடு செய்ததாக கூறப்படுகின்ற 2016 தேர்தலின்போது ட்ரம்ப்வேட்பாளராக மாத்திரமே இருந்தார்.ஆனால், இப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்துகொண்டு தேர்தல் வெற்றிக்காக வெளிநாட்டு உதவியை அந்தரங்கமாக அவர் நாடுவது தேசிய நலன்களுக்கும்  பாதகமானது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

தவிரவும், அந்தரங்க  நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற தரவுகள் சேகரித்துவைக்கப்பட்டிருக்கும் -மிகவும் இரகசியமாக பேணப்படுகின்ற - தரவுத்தளத்தை ஜனாதிபதியின் ஊழல்களையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் மறைப்பதற்கு வெள்ளைமாளிகை அதிகாரிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ட்ரம்பின் பதவிக்காலம் வெட்கக்கேடான ஊழல்களும் சர்ச்சைகளும் நிறைந்ததாக காணப்படுகிறது. முன்னைய சந்தர்ப்பங்களில் அவர் தண்டனைகளில் இருந்து தப்பித்துச்செல்லக்கூடியதாக இருந்தது.ஏனென்றால் விசாரணைகளுக்கு இடையூறுகளை விழைவித்ததில் அவரது பாத்திரம் தொடர்பில் சான்றுப்படுத்த எந்தவொரு அச்சுப்பிரதியும் இருக்கவில்லை.

மிகவும்  குறுகிய நாட்கள் தனது  தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரி மைக்கேல் ஃபிளின் குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணையை கைவிடுமாறு கேட்பதற்கு  சமஷ்டி புலனாய்வு பணியகத்தின் ( எவ்.பி.ஐ.) பணிப்பாளர் ஜேம்ஸ் கொமியுடன்  ஜனாதிபதி ட்ரம்ப் நடத்தியதாகக்  கூறப்படுகின்ற கலந்துரையாடல் தொடர்பான அச்சுப்பிரதி எதுவும் இருக்கவில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் தான் இரகசியமான பாலியல் தொடர்பு வைத்திருந்த நடிகையான ஸ்ரோமி டானியலுக்கு பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து அந்த தொடர்பு பற்றிய விபரங்களை அவள்  வெளியிடாமல் தடுப்பதற்கு தனது வழக்கறிஞருடன் ட்ரம்ப நடத்திய கலந்துரையாடல் பற்றிய அச்சுப்பிரதியும் கூட இல்லை.

இத்தடவை நிலைமை வித்தியாசமானது. உக்ரெயின் ஜனாதிபதியுடன் ட்ரம்ப் நடத்திய கலந்துரையாடல் பற்றிய அச்சுப்பிரதி கிடைத்திருக்கிறது.அவருக்கு எதிரான உறுதியான சான்றுகள் கைவசம் இருக்கின்றன.அதனால் காங்கிரஸின் ஜனப்பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு விசாரணைகளை( Impeachment Inquiry)  முறைப்படி முன்னெடுப்பதில் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் உற்சாகமாக  இறங்கியிருக்கிறார்கள். இந்த விசாரதைகள் இறுதியில் அவரின்  பதவி நீக்கத்ததில் முடியாமல் போகலாம்  அல்லது மீண்டும்  ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படக்கூடிய வாய்ப்புக்களை பாதிக்காமலும் போகலாம்.ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயம்.ட்ரம்ப் பாரதூரமான நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.

 ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு விசாரணையை ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஜனப்பிரதிநிதிகள் சபை தொடர்ந்து முன்னெடுக்கின்ற நிலையில் வெள்ளைமாளிகைக்கும் காங்கிரஸின் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான பதற்றநிலை தீவிரமடைந்திருக்கிறது.  

வாஷிங்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்த பின்லாந்து ஜனாதிபதி  சோலி நின்ஸ்டோவுடன் கூட்டாக வெள்ளை மாளிகையில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப் " அரசியல் குற்றச்சாட்டு விசாரணை ஒரு ஏமாற்றச்செயல் " என்றும் " அமெரிக்க மக்கள் மீதான ஒரு மோசடித்தனமான குற்றச்செயல் " என்றும் வர்ணித்தார்.அதேவேளை, ஜனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அந்த சபையின் புலனாய்வு கமிட்டியின் தலைவர் அடம் ஷிவ் சகிதம் நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் " தனது சபைக்கு ஜனாதிபதி மீதான அரசியர் குற்றச்சாட்டை விசாரணைசெய்வதைத் தவிர வேறுவழியில்லை "என்று குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் தெரிவித்தன.