பிரான்ஸ் தலைநகர் பாரிசில் காவல்துறை தலைமையகத்தில் பணியாளர் ஒருவர் சக பணியாளர்கள் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

காவல்துறை தலைமையகத்தின் தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக பணியாற்றிய 45 வயது நபர் தனது சக பணியாளர் ஒருவரை கத்தியால் குத்திய பின்னர் ஏனையவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக மூன்று ஆண்கள் பெண் ஒருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளார்.

காவல்துறை தலைமையகத்தின் படிக்கட்டில் அந்த நபர் இரண்டு; ஆண்களையும் மூன்று பெண்களையும் கத்தியால் தாக்கியதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை சுட்டுக்கொன்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கொலைகளை உறுதிசெய்துள்ள உள்துறை அமைச்சர் கிறிஸ்டொபர் கஸ்டெனர் தாக்குதலை மேற்கொண்ட நபர் தனது சக பணியாளர்களுடன் பணியாற்றியவேளை எந்த ஆபத்தான குணாதிசயங்களையும் வெளிப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கொலைகளிற்கான காரணத்தினை பகிரங்கப்படுத்தாத காவல்துறையினர் சந்தேகநபரின் வீட்டில் சோதனைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட நால்வரும் காவல்துறை உத்தியோகத்தர்கள் காவல்துறை தலைமையகத்தில் குழப்பமும் அச்சமும் காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தை பார்த்த சக பணியாளர்களால் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதனை மறக்க முடியாது என ஒருவர் தெரிவித்துள்ளார்.

நான் படிகளில் இருந்தவேளை துப்பாக்கி சத்தம் கேட்டது நான் இது வழமைக்கு மாறான விடயம் என நினைத்தேன்  அதன் பின்னர் மூன்று காவல்துறை அதிகாரிகளும் ஏனையவர்களும் அதிகாரிகளும் அழுதுகொண்டிருப்பதை பார்த்தேன் என காவல்துறை தலைமையக பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதலில் காவல்துறை அதிகாரியொருவர் தற்கொலை செய்துகொண்டார் என நினைத்தேன்,அதன் பின்னர் யாரோ அதிகாரிகளை கொலைசெய்துள்ளதை அறிந்தேன்,அந்த நபரை கொலை செய்த அதிகாரியும் அழுதுகொண்டிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களிற்காகவே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஊடகங்கள் அதேவேளை பயங்கரவாத விசாரணை பிரிவினரும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.