இந்தியா, கடலூர் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பெயர் சத்தியவதி. இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிந்த நிலையில்,  குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு அக்ஷயா, தர்ஷினி, நந்தினி என்ற மூன்று பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். 

அக்குழந்தைகள் மூவரும் 5 முதல் 9 வயது இடைப்பட்டவர்களாவர். இந்நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. மேலும்,  கணவன் தினமும் குடித்து விட்டு வீடு வந்து, மனைவி சத்தியவதியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்தியவதி கணவருடன் கோபித்துக்கொண்டு கடந்த வாரம் தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்ற அவரை சமாதானம் படுத்திய அவரது அம்மா, மணிகண்டனின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் வரும் வழியில் மீராலூர் என்ற இடத்தில் பசியில் இருந்த குழைந்தைகளுக்கு தின்பண்டம் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அம்மா வீட்டிலிருந்து திரும்பி வந்த சத்தியவதி மன உளைச்சலில் இருந்ததாகவே தெரிந்துள்ளது. இந்நிலையில் தின்பண்டங்களை சாப்பிட்டு உறங்கிய நிலையில் இருந்த தனது மூன்று குழந்தைகளையும் அப்பகுதியில் இருந்த ஓடையில் சிறிதும் இரக்கமின்றி வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து சிறிது நேரம் அப்பகுதியிலேயே இருந்துள்ளார் தாய் சத்தியவதி. அந்நேரம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார்,  சத்தியவதியை விசாரித்ததில், தனது கணவர் என்னிடம் தொடர்ந்து சண்டையிட்டு வருவதால் குழந்தைகளை இந்த ஓடையில் வீசி விட்டேன் என கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் தீ அணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்பு சத்யவதியின் முதல் குழந்தை அக்ஷயா மற்றும் நந்தியின் உடல்களை மீட்டுள்ளனர். தற்போது மூன்றாவது குழந்தையை தேடும் பணி நடந்து வருகிறது.

சம்பவத்தை அறிந்து வந்த குழந்தைகளின் தந்தையான மணிகண்டனின் கதறல் அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அத்தோடு, குறித்த தாயிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.