ஊடகங்களை ஆக்கிரமித்துள்ள விளம்பரங்களில் மிக அதிகமானவை பெண்களின் அழகுசாதனங்கள் பற்றியது தான். பெண்கள் தமது அழகை அதிகப்படுத்துவதில் அதிகம் விருப்பம் கொண்டவர்கள், இது அவர்களின் பலவீனம் எனக் கூறலாம். 

இவ் பலவீனத்தை தமது வருமானமாக்கும் பல நிறுவனங்கள், தமது உற்பத்திகளில் கலக்கும்  இரசாயனங்களின் அளவு நுகர்வோரின்  உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றது.

இதுபோன்ற ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பூச்சுகள்  சில்லறை விற்பனை நிலையங்கள் தொடங்கி  இணையதள சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. 

முகத்தை சில வாரங்களில் வெண்மையாக்கும் இவ் பூச்சுகளில் வெளுத்துப்போகச் செய்யும் இரசாயனமான ”ஹைட்ரோகுவினோன்” மற்றும் சில சமயம் நச்சுத்தன்மை உடைய பாதரசமும் அதிகளவில் சேர்க்கப்படுகின்றது. அத்துடன் இதில் இருக்கும் ஹைட்ரோகுவினோன், சுவரிலிருந்து வண்ணப்பூச்சுகளை நீக்கும் இரசாயனத்துக்கு இணையானது.

ஹைட்ரோகுவினோன் மற்றும் பாதரசம்  கலக்கப்பட்ட பூச்சிகளை பயன்படுத்துவதால் சருமத்தின் மேல் அடுக்கு நீக்கப்படுகின்றது, இவ் நிலைமை தோல் புற்றுநோய், நுரையீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றுக்குக்  காரணமாகின்றது. 

பல நாடுகளில் வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே, கடுமையான பக்க விளைவுகள் கொண்ட ஹைட்ரோகுவினோன், ஸ்டெராய்டுகள் அல்லது பாதரசம் கொண்ட பூச்சுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் எமது நாடுகளில் இப்படியான சந்தர்ப்பம் குறைவு எனவே நுகர்வோர் தமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு  சரும பூச்சை தெரிவு செய்யும் போது கருத்தில் கொள்ளவேண்டிய காரணிகள் சில உள்ளன. 

அவை

1. சரும பூச்சை தெரிவு செய்யும் போது அதன் உள் அடக்கம் குறித்து கவனம் செலுத்துதல் வேண்டும். அத்துடன் தயாரிப்பில் கலக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்த விளக்கம் தரப்படாவிட்டால் அதை வாங்காமல் தவிர்ப்பது சிறந்தது.

 2. மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சரும பூச்சு போலியானதாகவோ அல்லது தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனங்களைக் கொண்டதாகவோ இருக்கலாம். 

3. ஹைட்ரோகுவினோன் கலக்கப்பட்ட சரும பூச்சை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

4. இதுபோன்ற பூச்சை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில்  ஏதாவது பாதிப்பு ஏற்படுமாயின் உடனடியாக தோல் வைத்தியரை அணுகுதல் வேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் இவ்வாறு பயன்பாட்டிற்கு ஏற்றதல்லாத பூச்சுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்களின் விளைவாகப்  பூச்சுகள் பற்றிய முழுமையான அறிவு இல்லாத பட்சத்தில் அவற்றைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டாம் என பிரித்தானியாவின் எல்.ஜி.ஏ எனும் உள்ளூர் நிர்வாக அமைப்பு மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் "தடைசெய்யப்பட்ட இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தோல் பூச்சுகள் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. அது உங்களின் தோலைச் சேதப்படுத்துவதோடு, சருமநோய்கள் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும்  எனவே, எந்த வகையிலும் இதுபோன்ற பூச்சுக்களை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்று பிரித்தானியாவன்  எல்ஜிஏ அமைப்பின் மக்கள் நலப்பாதுகாப்பு பிரிவின் தலைவர் சைமன் பிளாக்பர்ன் தெரிவித்துள்ளார்.