(செ.தேன்மொழி)

இங்கிரிய பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய 17 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் , மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 24 ஆம் திகதி இங்கிரிய பகுதியில் 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

பின்னர் இவர்கள் இருவரும் ஹெரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த மாதம் 2 ஆம் திகதி இங்கிரிய பகுதியில் வர்த்தக நிலையமொன்றிற்குள் அத்து மீறி நுழைந்த குறித்த சந்தேக நபர்கள் வர்த்தக நிலையத்தின் பணிப் பெண் ஒருவரை துப்பாக்கி முனையால் அச்சுறுத்தி  தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாகவும்.

அதே மாதம் 20 ஆம் திகதி வர்தகரொருவர் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அவிசாவளை பகுதியில் வங்கி ஒன்றில் அத்து மீறி நுழைந்து தங்க நகைகளையும் , பணத்தையும் கொள்ளையிட்டமை சம்பவத்துடனும் சந்தேக நபர்கள் தொடர்பு கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் 17 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை திருட்டு நகைகளை வைத்திருந்தமை தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.