இலங்கைக்கு எதிரான இரணடாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த 27 ஆம் திகதி கராச்சி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்படது. இதன் பின்னர் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 67 ஓட்டத்தினால் வெற்றிபெற்று, தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந் நிலையில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்றைய தினம் கராச்சி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது. 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனுஷ்க குணதிலக்கவின் 133 ஓட்டத்துடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து, 297 ஓட்டங்களை குவித்தது.

இதன் பின்னர் 298 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாகர் சமான் 76 ஓட்டத்தையும், அடிட் அலி 74 ஓட்டத்தையும், பாபர் அசாம் 31 ஓட்டத்தையும், சப்ராஸ் அஹமட் 23 ஓட்டத்தையும், ஷரிஸ் சொஹேல் 56 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், இப்திகார் அஹமட் 28 ஓட்டத்தையும், வஹாப் ரியாஸ் ஒரு ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் நுவான் பிரதீப் 2 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார, வசிந்து அசரங்க மற்றும் செஹான் ஜெயசூரிய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் லாகூரில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.