(எம்.எப்.எம்.பஸீர்)
போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பாட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 மனுக்களையும் விசாரிக்க தீர்மனித்துள்ள உயர் நீதிமன்றம் அதற்கு திகதியும் குறித்தது.

அதன்படி இந்த 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் அடுத்த வருடன் ஜனவரி மாதம் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் விசாரிப்பதாக இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த 12 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பது குறித்து இன்று தீர்ப்பறிவிப்பதற்காக, இம்மனுக்கள் உயர் நீதிமன்றின் எழுவர் கொன்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் மீள எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அம்மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாகவும் அதற்கு திகதி குறிப்பிட்டும் உயர் நீதிமன்றம் அறிவித்தது.
21/4 தற்கொலை குண்டுத்தககுதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலா துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க உள்ளிட்ட 12 பேர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் பொறுப்புக் கூறத்தக்க தரப்பினராக முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி, பொலிஸ் மா அதிபர் பூஜித் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.