தனுஷ்க குணதிலக்கவின் நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 297 ஓட்டங்களை குவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த 27 ஆம் திகதி கராச்சி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்படது. இதன் பின்னர் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 67 ஓட்டத்தினால் வெற்றிபெற்று, தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந் நிலையில் இன்றைய தினம் மூன்றாவது போட்டி கராச்சி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தனுஷ்க குணதிலக்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்த வேளையில் 2.1 ஆவது ஓவரில் அவிஷ்க பெர்னாண்டோ 4 ஒட்டத்துடன் வெளியேறினார்.

இதனால் இலங்கை அணியின் முதல் விக்கெட் 13 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. எனினும் இதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த தனுஷ்க குணதிலக்க மற்றும் அணித் தலைவர் லஹிரு திரிமான்ன ஆகியோர் அணிக்கு வலுச் சேர்த்தனர்.

அதன்படி இவர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி 10 ஓவர் நிறைவில் 49 ஓட்டத்தையும், 19 ஓவர் நிறைவில் 98 ஓட்டத்தையும் குவித்தது. 

இந் நிலையில் 19.5 ஆவது ஓவரில் திரிமான்ன 36 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (101-2). தொடர்ந்து களமிறங்கிய அஞ்சலோ பெரேராவும் 13 ஓட்டத்துடன் பெவிலியன் திரும்பினார்.

நான்காவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மினோட் பானுக்கவுடன் ஜோடி சேர்ந்த தனுஷ்க குணதிலக்க 31 ஆவது ஓவரின் நிறைவில் சதம் விளாசினார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இவர் பெற்றுக் கொண்ட இரண்டாவது சதம் ஆகும்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 40 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களை குவித்திருந்தது. எனினும் 40 ஆவது ஓவரின் நிறைவில் மினோட் பானுக்க ரன்அவுட் முறையில் 36 ஓட்டத்துடன் நடையை கட்ட, அடுத்து வந்த செஹான் ஜயசூரிய 3 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (236-5).

இதன் பின்னர் 44.3 ஆவது ஓவரில் தனுஷ்க குணதிலக்க மொத்தமாக 134 பந்துகளில் ஒரு ஆறு ஓட்டம், 16 நான்கு ஓட்டம் உள்ளடங்கலாக 133 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 297 ஓட்டங்களை குவித்தது.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் அமீர் 3 விக்கெட்டுக்களையும், உஷ்மன் சின்வாரி, சடப் கான், வஹாப் ரியாஸ் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.