கடந்த சில நாட்களாக ஊடகங்களில் நான் கட்சி தாவப்போவதாக வெளியாகிய செய்தியில் உண்மையில்லையென இலங்கை பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி  நிலமே தெரிவித்தார்.

இன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கை பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்தார்.

அங்கு மேலும் அவர் தெரிவித்ததாவது,

கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் இம்மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் நான் அரசியல் வேலை செய்துகொண்டிருக்கின்றேன். நான் யாருக்காக வேலை செய்கின்றேன் என்பது எல்லோருக்குமே தெரியும்.

 பொது வெளியிலோ தனிப்பட்ட ரீதியாகவோ எவரும் என்னை ஐக்கிய தேசியக்கட்சிக்கு அழைக்கவில்லை எனக்கும் தெரியாமல் நான் கட்சி மாறுவதாக வந்த செய்தியை மறுக்கின்றேன் . 2006 ஆம் ஆண்டுக்கு முன் நான் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்தே பாராளுமன்றத்திற்கு தெரிவானவன் என்பதைக்கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனினும் அந்தக்காலம் தொடக்கம் என்னுடன் ஐக்கியதேசிக்கட்சியில் பயணம் செய்த நான் நேசிக்கின்ற என்னுடன் தோழமையுடன் தொடர்கின்ற ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எவரும் கட்சி மாறுமாறு கேட்கவில்லை ஆனால் என்னுடன் உறவில்லாத என்னுடன் தொடர்பில்லாத அனுராதபுர ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு.சந்திரானி பண்டார ஊடகங்களுக்கு நான் கட்சிமாற இருப்பதாக தெரிவித்திருப்பதை நான் வன்மையாக கண்டிப்பதோடு அவர் கூற்றில் உண்மை இல்லை என்பதையும் இந்த ஊடக மகாநாட்டில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.