Published by R. Kalaichelvan on 2019-10-02 17:15:23
(ஆர்.யசி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவை ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதை உறுதிபடுத்தியுள்ளதுடன் வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரச்சினைகள் குறித்தும் யுத்த காலத்தில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் உரிய பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தனித்தனியே அவர்களின் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் தமது முழுமையான ஆதரவை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதை உறுதிபடுத்தினர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் சுமார் ஒன்றரை மணி நேரமாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் இதில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக படையினர் நிலைகொண்டுள்ள மற்றும் வனபரிபாலன திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வடக்கு - கிழக்கு முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், யுத்த காலத்தில் வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் வட மாகாண முஸ்லிம்களின் நிலைமை குறித்தும், அவர்களை உரிய இடங்களில் மீண்டும் குடியேற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் புத்தளத்தில் உக்கிரமடைந்துள்ள அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்பட்டதுடன், முஸ்லிம்களுடைய பாதுகாப்பை உரியமுறையில் உத்தரவாதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.