(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முடியும் என்று குறிப்பிட்ட ஐக்கிய தேசிய கட்சி இன்று சுதந்திர கட்சியுடன் மீண்டும் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றது.

ஆளும் தரப்பின் பலவீனத்தின் வெளிப்பாடாகவே இதனை கருத வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் முறைகேடுகளை அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் விமர்சிக்க முடியுமா ? என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கேள்வியெழுப்பினார் தெரிவித்தார்.

வியத்மக அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகளை முன்கூட்டிய யூகித்தே ஐக்கிய தேசிய கட்சி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு எதிராக அரச  சார்பற்ற தொண்டு நிறுவனங்களுடன் கைக்கோர்த்து முறையற்ற விதத்தில் செயற்படுகின்றது.

அரசியல் தேவைகளுக்காகவே வழக்கு தாக்கல் செய்ய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது என்று  முன்னாள் சொலிஷ்டர் ஜெனரல்  சுஹலத்  கம்லத் உட்பட தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள  சொலிஷ்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க ஆகியோர் குறிப்பிட்டதை போன்றே தற்போது இரட்டை குடியுரிமையினை தொடர்புப்படுத்தி வழக்கு தாக்கல் செய்த அரச சார்பற்ற தொண்டு நிறுவன பிரதானிகளும் குறிப்பிடுவார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறலாம் என்று குறிப்பிட்ட ஐக்கிய தேசிய கட்சி தற்போது  சுதந்திர கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட தீர்மானித்துள்ளது. 

எத்தரப்பினருடன் கூட்டணி அமைத்தாலும் மீண்டும்  ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்களாணையினை பெற முடியாது. ஸ்ரீ  லங்கா சுதந்திர கட்சியின் எதிர்காலத்தையும்,கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கும் மதிப்பளிப்பவர்கள் ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.