தென்னாப்பிரிக்க அணியுடனான முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் விளாசி, அவர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 இருபதுக்கு -20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் இருபதுக்கு - 20 தொடர் ஏற்கனவே சமனிலையில் முடிய, இவ்விரு அணிகளுக்கிடையேயான முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டி இன்றைய தினம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இப் போட்டிக்காக இந்திய அணியில் உள்வாங்கப்பட்டுள்ள ரோகித் சர்மா பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இன்று களம் காணுகிறார்.

அதாவது ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் ஓட்டங்களை அள்ளிக் குவித்து வரும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருவதாக விமர்சனங்களுக்குள்ளானர்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சோதனை முயற்சியின் முன்னோட்டமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்பட்ட ரோஹித் சர்மா 2 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் டக் அவுட் ஆனார்.

நடுவரிசை வீரராக ரோஹித் சர்மா இதுவரை 27 டெஸ்டில் விளையாடி 39.62 சராசரியுடன் 1,585 ஓட்டங்களை சேர்த்துள்ளார். 3 சதங்கள், 10 அரை சதங்கள் இதில் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஓட்டம் 177 ஆகும். 

இவ்வாறான பின்னணியிலேயே இன்றைய தினம் ரோகித் சர்மா அணிக்குள் உள்ளீர்க்கப்பட்டதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் களமிறங்கி 84 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 52 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இந் நிலையில் மதியநேர உணவு இடைவெளியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 91 ஓட்டங்களை குவித்துள்ளது.

ரோகித் சர்மா 52 ஓட்டத்துடனும், அகர்வால் 39 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளமை குறிப்பிடத்தக்கது.