மனிதக் குரங்கு வகையைச் சேர்ந்த சாண்ட்ரா  ஒராங்குட்டான் குரங்கை அமெரிக்காவின் ஃபுளோரிடா காடுக்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு அர்ஜென்டினா நீதிமன்றத்தினால் 'மனிதர் அல்லாத ஆள்' என்ற தகுதியையும் சுதந்திர உரிமையையும்  முதல் தடவையாக பெற்ற  ஒராங்குட்டான் சாண்ட்ரா ஆகும். இதனை அடுத்து , மனிதர்களுக்கு உள்ளதைப் போன்ற சட்ட உரிமைகள் அதற்கும் இருப்பதாகவும் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது. 

இந்நிலையில் கிழக்கு ஜெர்மனியின் மிருகக்காட்சி சாலை  ஒன்றில் பிறந்த சான்ட்ரா 1995ஆம்  ஆண்டு புய்னஸ் ஏர்ஸ் நகரில் உள்ள விலங்கு காட்சியகத்துக்கு விற்கப்பட்டது. தன் வாழ்வின் பெரும்பான்மை காலத்தை தனிமையான கூண்டில் கழித்த சான்ட்ராவுக்கு 1999ல் ஒரு மகள் பிறந்தாள். ஆனால் அந்த குட்டியும் சீனாவில் உள்ள ஒரு விலங்கு காட்சியகத்துக்கு விற்கப்பட்டது.

விலங்கு நல ஆர்வலர்களால் மேற்கொள்ளப்பட்ட சட்டப் போராட்டத்தில் சான்ட்ரா பெற்ற வெற்றி அதற்கு உலகப் புகழைத் தேடித்தந்தது. இதன் மூலம் மனிதக் குரங்குகள் சட்டப்படி சொத்துகளாக அல்லாமல் ஆட்களாக நடத்தப்படுவதற்கான முன்னுதாரணம் ஏற்பட்டது.

இவ் வழக்கின் முடிவில் "விலங்குகள் உணர்வுள்ளவை. அவற்றை மதிக்கவேண்டும் என்பது நமது கடமை அவற்றின் உரிமை" என்று தீர்ப்பை அளித்த நீதிபதி எலனா லிபரேட்டோரி தெரிவித்திருந்தார்.

இந்த தீர்ப்பின் பின்பும்  ஐந்து ஆண்டுகள்  மிருகக்காட்சி சாலை  இருந்தது சான்ட்ரா. அங்கு விலங்குகளுக்கு கொடுமை இழைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது சான்ட்ராவிற்கு முழுமையான விடுதலை கிடைத்துள்ளது.