இன்று 7வது நாளாக தொடர்ச்சியாக ரயில்வே வேலைநிறுத்தப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை நேற்றைய தினம் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் விசேட  அமைச்சரவைக்குழுவிற்குமிடையில் நேற்று மாலை  இடம்பெற்ற  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதால் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

நேற்று மாலை ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சரவை உபகுழுவிற்கும் இடையிலான  பேச்சுவார்த்ததையின் போது தமது கோரிக்கைகளுக்கு தகுந்த தீர்வொன்று கிடைக்கப்பெறவில்லை.

அதனால் வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாகவும்  ரயில்வே பொறுப்பதிகாரிகள் சங்கத்தின்  பிரதான  செயலாளர்  ஜானக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.  

மேற்படி அமைச்சரவை உபகுழுவில் அமைச்சர்களான மங்கள  சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, வஜிர அபேவர்தன, ராஜித  சேனாரத்ன மற்றும் இராஜாங்க  அமைச்சர்  அசோக்  அபேசிங்க  ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். 

ரயில்வே தொழில் சங்கங்களின்  தொடர் வேலை  நிறுத்தத்தின்  காரணமாக  பொதுமக்கள் பெரும் அசௌகரியத்தை  எதிர்நோக்கியுள்ளனர். ரயில்வே தொழிற்சங்கங்கங்கள் இன்று ஏழாவது நாளாகவும் வேலைநிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டதுடன், இன்று காலை 10 ரயில்கள் சேவையில் ஈடுப்படடுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காலையில் தொழில்  நடவடிக்கைகளுக்காக   செல்லும் அரச மற்றும் தனியார் ஊழியர்களும் மாலையில் வீடு  திரும்பும் ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு  முகங்கொடுத்துள்ளனர்.  

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு  உள்ளிட்ட கோரிக்கைகளை  முன்வைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்களின் தொழில் சங்கங்களின் சுமார் 15000 உழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவிலிருந்து வேலை  நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு ஜனாதிபதி  தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஆசிரியர் மற்றும் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு அமைச்சரவை  அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.