நாம் ஒவ்வொருவரினது வாழ்விலும் மிக அழகிய நினைவுகளையும் அனுபவங்களையும் ஏற்படுத்தித் தந்த பருவம் சிறுவர் பராயமே. அதேபோல், ஏனையோரிடம் அழகிய நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது முதுமை பருவம் எனக் கூறலாம். இந்த இரு பருவத்தினரும் தமது தேவைகளுக்காக  ஏனையோரிடம் தங்கிவாழும் குழுவினர். இவர்களின்  நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்காகவும் முதியோர் மற்றும் சிறுவர் தினம்  அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் சர்வதேச சிறுவர் தினம் ஜீன் மாதம் 01 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. உலகெங்கும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக 1954 இல் டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் பன்னாட்டு சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. சிறுவர் தினத்தை  ஒவ்வொரு நாடும் வெவ்வேறு தினங்களில் கொண்டாடுகின்றன.அந்தவகையில், இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 1ஆம் திகதியான இன்று சிறுவர், முதியோர் கொண்டாடப்படுகின்றது. எனினும் ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 ஆம் திகதி  கொண்டாடுகின்றன. 

‘நட்பு சூழ சிறுவர்களுக்கு வெற்றியைப் பரிசளிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் எமது நாட்டில் சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

நாமும் நமது சூழலும் சிறுவர்களினது மகிழ்ச்சியை மகிழ்ச்சி, பாதுகாப்பு, உரிமை போன்றவற்றில் பங்கெடுத்து கொள்வது மிக முக்கியமானதொரு அம்சமாகும். சிறுவர்களை மகிழ்ச்சியானவர்களாகப் பேணுவதன் மூலமே அவர்களின் திறமைகளும் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளும் வெளிப்படுகின்றன. அதுவே அவர்களின் எதிர்காலத்தையும் நமது நாட்டினது எதிர்காலத்தையும் வெற்றிப் பாதையில் பயணிக்க வழிவகுக்கின்றன.

கடந்த ஆண்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட  தகவல்களின் படி  0.8%குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர். இதில் பெருமளவிலான சிறுவர்கள் பெரும்தோட்டப் பகுதியை சேர்ந்த சிறுவர் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் எதிர்காலத்தில் பெரும் பங்கு வகிக்கும் சிறுவர்கள் குறித்து இன்னும் அக்கறையுடன் செயற்பட வேண்டியது அரசாங்கத்தினதும், நம் ஒவ்வொருவரினதும் முக்கிய கடமையாகும். 

நம்மைச் சார்ந்து வாழும் சிறுவர்களுக்கும், நம்மைச் சூழ உள்ள சிறுவர்களுக்கும் நிகழும் உரிமை மீறல்கள் பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுவதன் மூலம் எமது நாட்டின் சிறுவர்கள் அனைவரும் தமது உரிமைகளை அனுபவிக்க உதவலாம். 

சிறுவர் தொழிலாளர்கள் அற்ற ஒரு சிறந்த நாட்டையும் கல்வி அறிவு உடைய ஒரு சிறந்த சமூகத்தையும் உருவாக்குதல் நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.