இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லீட்ஸ் நகரில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகின்றது.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டித் தொடரில் பங்கேற்கிறது.

இளம் வீரர்களை கொண்ட ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணியும் அனுபவ வீரர்கள் பலரை கொண்ட எலஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியும் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்குவதால் ஆட்டம் போட்டித் தன்மை நிறைந்ததாக இருக்கும்.

இலங்கை அணியை பொறுத்தவரை தலைசிறந்த வீரர்கள் இருவரான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இல்லாமல் இளம் வீரர்களை கொண்டு களமிறங்குகின்றது.

கடந்தகாலங்களில் இலங்கை அணி குறிப்பிட்டு கூறுமளவுக்கு வெற்றிகளை பதிவு செய்திருக்கவில்லை. எனினும் தற்போது புதிய பயிற்றுவிப்பாளர் கிரகம் போர்டின் வியூகங்களுடன் இங்கிலாந்தை எதிர்த்தாட உள்ளது.

2014ஆம் ஆண்டு லீட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்ட இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் முதல்டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது அணிக்கு பின்னடைவாகும். எனினும் ஏனைய வீரர்கள் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத் தொடரிற்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் பரிந்துரைக்கப்பட்டு, இலங்கை கிரிக்கெட் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிப் பங்கீட்டு அடிப்படையில் தொடரின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படவுள்ளமையும் முக்கியமான ஒரு விடயமாகும்.

இத் தொடரில் டெஸ்ட் போட்டி ஒன்றின் வெற்றிக்கு 4 புள்ளிகளும், வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்தால் தலா 2 புள்ளிகளும், ஒரு நாள் மற்றும் இருபது 20 போட்டிகளின் வெற்றிக்கு 2 புள்ளிகளும் வழங்கப்படும். இதுவரையான இரு அணிகளுக்கிடையிலான 28 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 10 இலும் இலங்கை 8 இலும் வென்றுள்ளதுடன் 10 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.