இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 67 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த 27 ஆம் திகதி கராச்சி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த முதலாவது ஒருநாள் போட்டியானது, அங்கு நிலவும் தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது. 

இந் நிலையில் இரண்டாவது போட்டி நேற்றைய தினம் கராச்சி மைதானத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமானது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்தது.

306 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணியின் முதல் ஐந்து விக்கெட்டுக்களும் சொப்ப ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

தனூஷ்க குணதிலக்க 14 ஓட்டத்துடனும், சண்டீர சமரவிக்ரம 6 ஓட்டத்துடனும், அவிஷ்க பெர்ணான்டோ டக்கவுட்டுடனும், ஒசத பெர்ணான்டோ ஒரு ஓட்டத்துடனும் மற்றும் லஹிரு திரமான்ன டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இலங்கை  அணி 8 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 28 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

எனினும் ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த செஹான் ஜெயசூரிய மற்றும் தசூன் சானக்க ஆகியோர் கைகோர்த்து இலங்கை அணியினை மீட்டெடுக்க பெரிதும் பாடுபட்டனர். 

நீண்ட நேரம் நிலைத்திருந்த இந்த ஜோடி 40.5 ஆவது ஓவரில் செஹான் ஜெயசூரியவின் ஆட்டமிழப்புடன் பிரிந்தது. அதன்படி செஹான் ஜெயசூரிய மொத்தமாக 109 பந்துகளை எதிர்கொண்டு 96 ஓட்டங்களை குவித்து உஷ்மான் சின்வாரியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனால் இலங்கை அணியின் 6 ஆவது விக்கெட் 205 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. இதன் பின்னர் 41.1 ஆவது ஓவரில் தசூன் சானக்க 68 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற, இலங்கை அணி  46.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் எதிர்கொண்டு 238 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் உஷ்மன் சின்வாரி 5 விக்கெட்டுக்களையும், சடப் கான் 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் அமீர், இமாட் வசிம் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி நாளைய தினம் இதே மைதானத்தில் ஆரம்பாகவுள்ளது.