(ஆர்.யசி)

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியிலேயே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின்  அடுத்தகட்ட பயணம் தங்கியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியுடன் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை நமதாக்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்த கூட்டமாக இன்று கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், 

நீண்ட காலமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஜனாதிபதி அதிகாரம் இருக்கவில்லை.ஆகவே எமது தரப்பு பல சந்தர்ப்பங்களில் பல சவால்களுக்கு முகங்கொடுத்தது. 

இந்நிலையில் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மிகச்சரியான தீர்மானமொன்றை முன்னெடுத்தார். கட்சியின் பிளவுகளை தடுத்து கட்சியை ஒன்றாக்க அவர் எடுத்த முடிவின் பிரகாரம் இன்று ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் புதுப்பொலிவுடன் ஒன்றிணைந்து எமது பலம் ஏனையவர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் பலர் ஒன்றிணைந்துள்ளனர். இது எமக்கு மிகப்பெரிய பலமாகும்.  

எஞ்சியுள்ள குறுகிய காலத்தில் நாம் வேகமாக செயற்பட வேண்டியுள்ளது. இன்னமும் 45 நாட்களே ஜனாதிபதி தேர்தலுக்காக உள்ளது.

 ஆனால் இந்த குறுகிய காலம் எனக்கு பிரச்சினையான விடயம் அல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் மிகவும் குறுகிய காலத்தில் செயற்பட்டே எமது வெற்றியை தேடிக்கொண்டும்.

 இப்போதும் சஜித் பிரேமதாஸ மீதான நம்பிக்கையில் ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர். சகல தரப்பும் எம்முடன் இணைத்து வருகின்றனர். ஆகவே இது வெற்றிபெறும் போராட்டம் என அவர் தெரிவித்தார்.