இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வசே கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கராச்சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த 27 ஆம் திகதி கராச்சி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த முதலாவது ஒருநாள் போட்டியானது, அங்கு நிலவும் தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது. 

இந்த முடிவானது போட்டியை காண வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதாவது சொந்த மண்ணில் கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச போட்டியொன்றை நேரில் காண வந்த ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியானது நேற்றைய தினம் இடம்பெற ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கராச்சியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்றைய தினத்துக்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையிலேயே இன்றைய தினம் கராச்சி மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பமாகவுள்ளது.