செம்மலை விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது குறித்த நீதிமன்ற உத்தரவு காலதாமதமாகியது என ஞானசாரதேரர் உள்ளிட்டவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டமைக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாது விட்டால் விமர்சனங்களைக் கொண்டிருக்கும் இலங்கை நீதித்துறையின் மீதான முழுமையான நம்பிக்கையை மக்கள் இழப்பதற்கு வழியேற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டமை மற்றும் சட்டத்தரணிகள் பெரும்பான்மை சமூகத்தினரால் தாக்கப்பட்டமையை அடுத்து வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகள் மேற்கொண்டுவரும் பணிப்புறக்கணிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார். அவை வருமாறு,
நீதிமன்று விடுத்த முதற்கட்டளை
செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விகாரையின், விகாராதிபதி கொலம்பே மேதாலங்கார தேரரின் பூதவுடலை இறுதி மரியாதைகளுக்காக ஆலய வளாகத்தினுள் கொண்டுவரக் கூடாது என்றும் அவ்வாறு கொண்டு வரப்பட்டால் இனங்களுக்கிடையில் பதற்றம் ஏற்படும் ஆபத்துள்ளதாகவும், இந்துசமய பாரம்பரியங்கள் மீறப்படும் என்பதை சுட்டிக்காட்டியும் நீதிமன்றம் அந்நடவடிக்கைக்கு தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஆலய பரிபாலன சபை மற்றும் தமிழ் மக்கள் மரபுரிமை தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விடுமுறை தினமாகியதால் பதில் நீதிவான் ஏ.எம்.சுதர்சனின் கவனத்திற்கு வழக்கு இலக்கம் ஏஆர் 745/2019 கொண்ட மனு கொண்டுவரப்பட்டது. அதன்போது, '23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9மணிக்கு மனுதாரர்களும், பிரதிவாதிகளும் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்திற்கு ஆஜராக வேண்டும்.
நீதிமன்றம் கட்டளையொன்றை அறிவிக்கும் வரையில் கொலம்பே மேதாலங்கார தேரரின் பூதவுடலை இப்பூமியில் புதைப்பதோ எரிப்பதோ கூடாது. கட்டளை அறிவிக்கும் வரையில் இருதரப்பினரும் இப்பூமியில் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் செயற்படக்கூடாது.
அத்துடன் கோயில் மற்றும் விகாரையின் வழிபாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். பொலிஸார் சமாதானக்குலைவு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் இந்தக் கட்டளை இருதரப்பினருக்கும் கையளிக்கப்பட வேண்டும். அத்துடன் குறித்த வளாகத்தில் இந்த கட்டளை பகிரங்கமாக ஒட்டப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதேச சபையின் எழுத்துமூல அறிவிப்பு
மயானங்கள் மற்றும் இடுகாடு கட்டளைகள் சட்டத்திற்கு ஏற்ப கடந்த 22ஆம் திகதி, இடுகாடுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் சபையின் அனுமதியின்றி எந்தவொரு பூதவுடலையும் புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு சபையின் அனுமதி அவசியம் என்றும் இந்த விடயத்தில் பொலிஸார் அவதானம் கொண்டு தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய எழுத்துமூல ஆவணம் கரைத்துரைப்பற்று பிரதேச சபையால் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட செயலாளர், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர், செம்மலை கிழக்கு கிராம அலுவலர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையும் உடனடி உத்தரவும்
இந்நிலையில் 23ஆம் திகதி இந்த வழக்கு விசாரணை முல்லை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் மனுதாரர்கள் சார்பில் எனது தலைமையிலான சட்டத்தரணிகளும், பௌத்த தேரர்கள் சார்பில் சட்டத்தரணி தல்பாவில தலைமையிலான குழுவினரும், பிரதேசசபை சார்பில் சட்டத்தரணி இளங்குமரனும் ஆஜராகியிருந்தனர். இதன்போது பௌத்த தேரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், விகாராதிபதியின் உடலை விகாரைக்கு அண்மையிலேயே எரிப்பதற்கு அனுமதி கோரிவாதிட்டார்கள்.
இந்து சமய முறைப்படி இறந்தவரின் உடலை ஆலயத்தினுள் கொண்டுவர முடியாது. அதனை மீறும் வகையில் தேரரின் உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. அது தவறானதாகும். விகாராதிபதியின் உடலை பிறிதொரு இடத்தில் தகனம் செய்வதற்கு நீதிமன்றம் கட்டளையை பிறப்பிக்க வேண்டும் என்று எமது தரப்பில் எதிர்த்து வாதிடப்பட்டது.
அத்துடன் கரைத்துரைப்பற்று பிரதேச சபைக்கே இடுகாடுகள் மயானங்கள் கட்டளைகள் சட்டத்தின் பிரகாரம் பூதவுடலை தகனம் செய்வது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் இருப்பதாகவும் நீதிமன்றம் இதில் உத்தரவிடமுடியாது என்றும் மன்றின் கவனத்திற்கு எடுத்துக் கூறப்பட்டது.
இந்த விடயம் இன, மத ரீதியான உணர்வு பூர்வமான விடயமாகையால் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் மூலமாக இணக்கம் காண்பதற்கு மன்று ஒத்திவைக்கப்பட்டு 15நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு எதிரில் உள்ள இராணுவ முகாமிற்கு பின்னால் உள்ள கடற்கரை பகுதியில் தகனம் செய்வதற்கு பிரதிவாதிகள் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
அதன்போது, அவ்வாறு தகனம் செய்யப்படுகின்றபோது அந்த நிலத்தினை தேரர்கள் எதிர்காலத்தில் உரிமை கோருவதோடு நினைவுச்சிலைகளை அமைப்பதற்கும் முயல்வார்கள். அம்முயற்சிகள் இனங்களுக்கிடையிலான முறுகல்களை ஏற்படுத்தும் என்று நாம் சுட்டிக்காட்டி எதிர்ப்பினை வெளியிட்டோம்.
இவற்றை கவனத்தில் கொண்ட மன்று, குறித்த கடற்கரைப்பகுதியில் உடலை தகனம் செய்ய முடியும் என்றும் அதன் பின்னர் அந்நிலத்திற்கு யாரும் உரிமை கோரமுடியாது என்றும் அதில் எவ்விதமான கட்டுமானங்களையும் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டது.
அத்துடன் கடற்கரையில் எப்பகுதியில் தகனம் செய்வது என்பதை இருதரப்பினர் மற்றும் ஆஜரான சட்டத்தரணிகள் தலா இருவர் பங்கேற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இடத்தினை நேரடியாகச் சென்று அடையாளமிட வேண்டும் என்றும் மன்று கூறியது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் தலைமை பொறுப்பதிகாரிக்கு இந்த விடயத்தினை நடைமுறைப்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
உதாசீனம் செய்யப்பட்ட நீதிமன்ற உத்தரவு
மன்றின் உத்தரவின் பிரகாரம், சட்டத்தரணிகளான கனரத்தினம் சுகாஸ், கணேஸ்வரன், மணிவண்ணன் ஆகியோரும் ஆலய நிருவாகத்தினர் மற்றும் தமிழர் மரபுரிமை பேரவையின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் தகனம் செய்வதற்கான இடத்தினைக் காண்பிப்பதற்காக சென்றபோது நீராவியடிப்பிள்ளையார் ஆலய கேணிக்கு அருகில் பெருந்திரளான பெரும்பான்மை மக்கள் சூழ பௌத்த தேரர்கள் உயிரிழந்த விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதற்கான சிதையை தயார் செய்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவை அவர்களிடத்தில் கூறச்சென்ற சட்டத்தரணிகளை தாக்கிய தோடு பொலிஸாரும் அப்பகுதிக்கு அருகில் செல்வதற்கு இடமளிக்காது தடுத்திருந்தார்கள். நீதிமன்ற கட்டளையை அங்கிருந்த பொறுப்பதிகாரிகளுக்கு கூறியபோதும் அவர்கள் கருத்திலெடுக்காது செயற்பட்டிருந்தார்கள்.
சட்டத்தரணிகளின் அடுத்த கட்ட நகர்வு
நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டமை, சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு கிழக்கில் மறுதினமான 24ஆம் திகதி சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு வாய்களை கறுப்புத்துணியால் கட்டி போராட்டத்தினையும் நடத்தினார்கள். அத்துடன் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பணிப்புறக்கணிப்பிலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் ஒன்றிணைந்து கலந்துரையாடிய நாம் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். அதற்கமைவாக கடந்த 21ஆம் திகதி நீராவியடிப் பிள்ளையார் கோவிலருகே இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதன் பிற்பாடு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் மனித உரிமைகள் பேரவைக்கும் முறையிட்டுள்ளோம்.
அத்துடன் சட்டத்தரணிகள் சில விடயங்களை பெரிதாக்குகின்றனர் என தென்னிலங்கை ஊடகங்களிலே வெளியிடப்படும் செய்திகளுக்கு உரிய பதிலறிக்கை வழங்குவது என்று தீர்மானித்துள்ளோம். நீதிமன்றின் கட்டளையை அவமதித்து செயற்பட்டமை தொடர்பாக ஞானசார தேரர் மற்றும் அவர் சார்ந்த தரப்புகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்படுமென சட்ட மா அதிபர் எழுத்துமூல உறுதி வழங்கவேண்டும். சட்ட மா அதிபர் எழுத்துமூல உறுதிமொழியை வழங்காவிடின் சேவைப் புறக்கணிப்பை தொடர்வது குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் என்றும் தீர்மானித்துள்ளோம்.
பிரதிவாதிகள் அறியவில்லையா?
விகாராதிபதியின் உடலை தகனம் செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்று கூறமுடியாது. காரணம், 22ஆம் திகதியே பதில் நீதிவான் கட்டளையை பிறப்பித்துள்ளார். அதேநேரம் 23ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அவர்களது சட்டத்தரணிகளும் இருந்துள்ளனர். ஞானசார தேரரோ அவரது தரப்பினரோ உத்தரவு கிடைக்கப்படவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதித்துறையின் மீதான விமர்சனம்
இலங்கை நீதித்துறையில் சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமன் எனக்கொள்ளப்படுகின்றது. நீதிமன்றத்தீர்ப்புக்கள் தவறாக இருந்தால் அதற்கு எதிராக மேன்முறையீடுகளைச் செய்யமுடியும்.ஆனால் வழங்கப்படும் தீர்ப்புக்களை ஏற்காது மறுக்க முடியாது. இதில் ஒரு தரப்பினர் உத்தரவை ஏற்க முடியாது என்றும் கூறமுடியாது. நீதிமன்ற உத்தரவை அமுலாக்க வேண்டிய பொலிஸார் அதிலிருந்து தவறியிருக்கின்றார்கள்.
இந்த விடயத்திற்கு நீதிக் கட்டமைப்பில் உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் நாளை நாடளாவிய ரீதியில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம் ஏற்படும். அவ்வாறான நிலைமை விமர்சனங்களைக் கொண்டிருக்கும் இலங்கை நீதித்துறையின் மீதான முழுமையான நம்பிக்கையை மக்கள் இழப்பதற்கு வழியேற்படுத்தும்.
ஆகவே நீதிமன்ற உத்தரவை மீறிய இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே எதிர்வரும்காலத்தில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த முடியும். இதனை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும்.
ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM