சிறந்த முகாமைத்துவத்தைப் பின்பற்றாத  கால மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தம்மை  தீர்க்கதரிசனத்துடன் மாற்றிக் கொள்ளத் தவறும் நிறுவனங்கள் எவ்வாறு அடிச்சுவடே தெரியாமல் காணாமல் போக நேரிடும் என்பதற்கு 178 ஆண்டுகள் பழைமையான தோமஸ் குக்  நிறுவனத்தின் வீழ்ச்சி  ஒரு  முன்னுதாரணமாகவுள்ளது.

 நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தனது நிறுவனத்தின் பெயருக்குள்ள கௌரவமும் நன்மதிப்பும் தம்மைக் காப்பாற்றும் என அந்த நிறுவனத்தின் முகாமைத்துவத்தினர்  கொண்டிருந்த கணிப்பு கடந்த திங்கட்கிழமை கானல் நீரானது.

முடக்கப்படுவதிலிருந்து அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற எந்தவொரு  நிதி நிறுவனமோ அரசாங்கமோ முன்வராத நிலையில்  திடீரென அந்த நிறுவனம் திவாலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டமை அதன் பல்லாயிரக்கணக்கான  வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 காலங்காலமாக விமானசேவைகள் மற்றும் சுற்றுலா ஏற்பாடுகளை  மேற்கொண்டு வழங்கி வந்த இந்த நிறுவனத்தின் திடீர் முடக்கத்தால் விடுமுறைகளைக் கழிக்க அந்த நிறுவனத்தில் தங்கியிருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 150,000 சுற்றுலாப் பயணிகள்  நாடு திரும்ப முடியாது ஸ்தம்பித நிலையை அடைந்தனர். மேற்படி முடக்கத்தால் அந்த நிறுவனத்தின்  உலகமெங்குமுள்ள  600,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். 

தோமஸ் குக் கடந்து வந்த பாதை

 தோமஸ் குக் நிறுவனம் பிரித்தானியாவைச் சேர்ந்த  தளபாடத் தயாரிப்பாளரும் மதபோதகருமான தோமஸ் குக்கால் 1841ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அவர் அந்த நிறுவனத்தை ஆரம்பித்த நோக்கமே வேடிக்கையானது. 

 பிரித்தானிய இளைஞர்கள் பொழுதுபோக்காக  மது பாவனையில் ஈடுபட்டு அதற்கு அடிமையாகி சீரழிவதை அவதானித்த அவர், அவர்களுக்கு மாற்று பொழுதுபோக்கொன்றை வழங்கி அவர்களது கவனத்தை வேறு திசையில்  திருப்பத் திட்டமிட்டார்.

அதன்பொருட்டு அவர் தோமஸ் குக் நிறுவனத்தை ஆரம்பித்து லெயிசெஸ்டரிலிருந்து லோக்பரோ வரையான 12 மைல் புகையிரத பயணத்துக்கு ஏற்பாடுகளைச் செய்து வழங்கினார்.

பின்னர் அந்த புகையிரத சேவை லெயிசெஸ்டர்,  நொட்டிங்ஹாம், டெர்பி மற்றும் பிர்மிங்காமிற்கிடையிலான சேவையாக விரிவுபடுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தோமஸ் குக்  படிப்படியாக சுற்றுலா ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனமாக  வளர்ச்சி கண்டது.

1865 ஆம் ஆண்டு தோமஸ் குக்கின் மகனான ஜோன் மேஸன் குக் அந்த நிறுவனத்தில் முழு நேரப் பணியாளராக இணைந்து கொண்டு 1871 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் பங்காளராக மாறி அந்த நிறுவனத்தின் பெயரை  தோமஸ் குக்  அன்ட் சன் என பெயர் மாற்றினார்.

இந்நிலையில் 1948ஆம் ஆண்டில் புகையிரத சேவை தேசியமயமாக்கப்பட்ட போது  தோமஸ் குக் நிறுவனமும் தேசியமயமாக்கப்பட்டு பிரித்தானிய  போக்குவரத்து ஆணையகத்தின் ஒரு பிரிவாக மாறியது.

தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் தேசியமயமாக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இந்த நிறுவனம், ட்ரஸ்ட் ஹவுஸ் போர்ட், மிட்லான்ட் வங்கி மற்றும் ஆட்டோமொபைல்  சங்கம் என்பவற்றை உள்ளடக்கிய கூட்டு நிறுவன அமைப்பால் உரிமையாக்கப்பட்டது.

1992ஆம் ஆண்டில் ஜேர்மனியை அடிப்படையாகக் கொண்ட  ஐரோப்பிய  வர்த்தக வங்கியான வெஸ்ட் எல்.பி.ஏ.ஜி. வங்கியால் சுவீகரிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2001 ஆம் ஆண்டில்  ஜேர்மனிய சி அன்ட் என். டூறிஸ்டிக் ஏ.ஜி. நிறுவனத்தால் உடைமையாக்கப்பட்டது. இதனையடுத்தே அந்த நிறுவனத்தின் பெயர் தோமஸ் குக் ஏ.ஜி. என மாற்றமடைந்து கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை அந்த நிறுவனம் முடக்கப்படும் வரை அதே பெயரில் இயங்கியது. மேற்படி நிறுவனத்துடன் 2007ஆம் ஆண்டு இணைந்து கொண்ட  மை ட்ரவல் குழும நிறுவனம் அண்மையில் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

தோமஸ் குக்கின் வீழ்ச்சிக்கு காரணம்

தோமஸ் குக் நிறுவனம்  தனக்கு நிதி வசதியளித்து வங்கியாளர்களிடமிருந்து 200 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான மேலதிக முதலீட்டைப் பெற முடியாது போனமையே  அதன் திடீர் வீழ்ச்சிக்கு  வெளிப்படையான நேரடிக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஆண்டாண்டு காலமாக ஆலவிருட்சமாக  வளர்ச்சியடைந்த அந்த  நிறுவனத்தை முடக்கத்துக்கான பாதைக்கு இட்டுச் செல்ல வழி வகுத்த நிஜ காரணங்கள் விரல் விட்டு எண்ண முடியாதவையாக உள்ளன.

காலங்காலமாக முன்னணியிலிருந்த நிறுவனம் என்ற  தமது நன்மதிப்பு  தமக்கு  வாடிக்கையாளர்கள் மத்தியிலான ஆதரவை என்றென்றும் தக்க வைத்திருக்கும் என தோமஸ் குக்கின் நிர்வாகத்தினர்  மெத்தனமாக அலட்சியப்போக்குடன் இருந்தமை அந்நிறுவனத்தை படிப்படியாக  சரிவுப் பாதையில் கொண்டு சென்று இறுதியில் அந்த நிறுவனம் முழுமையாக  முடக்கப்படுவதற்கு வழிவகை செய்துள்ளது.

தோமஸ் குக் நிறுவன நிர்வாகத்தினர்  வாடிக்கையாளர்களின் இரசனை மாறிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கேற்ப புத்துருவாக்கம் மற்றும் நவீனமயமாக்கம் என்பன தொடர்பில்  உரிய மதிப்பீடுகளை மேற்கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க  தவறி கடந்த காலங்களில் தமக்கு வெற்றிகரமாக அமைந்த ஒரே வழியில் பரிசீலனை  செய்யாது பயணித்துள்ளதை அவர்கள் கடந்து வந்த பாதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

 மாற்றத்தை உள்வாங்காமல் பல வருட காலமாக  ஒரே நடைமுறையை பின்பற்றி வந்தமையே அந்த நிறுவனத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக  நொடிந்த நிறுவனங்களை மீட்பது தொடர்பில் நிபுணத்துவம்  பெற்ற போர்ப்ஸ் போர்ட்டன் கம்பனியின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான நிக் ஸ்மித் தெரிவிக்கிறார்.

 தீர்கதரிசனமற்ற  செயற்பாடுகளுக்கு அப்பால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பான  பிறிக்ஸிட் செயற்கிரமமும் தோமஸ் குக்கின் தோல்விக்கு களம் அமைத்துத் தந்துள்ளது.

பிறிக்ஸிட் தொடர்பில் தீர்க்கமான ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் பிரித்தானியாவிலுள்ள  மக்கள்  சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதை அண்மைக்காலமாக குறைத்துக் கொண்டுள்ளமை  தோமஸ் குக்கின் வருமானங்கள் குறைந்து கடன் சுமை அதிகரிக்க வழிவகை செய்துள்ளது.

 பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து   உடன்படிக்கையொன்றை  எட்டாது பிரியும் சாத்தியக் கூறுகள் அதிகமாகவிருந்த நிலையில் அதன் பின்னர் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குமிடையிலான உறவுகள் எவ்வாறு அமையும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவியது. இந்நிலையில் பிரித்தானியாவிலிருந்து  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் அந்நாடுகளிலிருந்து  பிரித்தானியாவுக்கும் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளின் நிலைப்பாடு என்னவாக அமையும் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

பிரித்தானியா  ஐரோப்பிய  ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பான செயற்கிரமத்தால் ஸ்ரேலிங் பவுண் வீழ்ச்சியடைந்துள்ளமையும்   யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகளுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பில் பிரித்தானிய வாடிக்கையாளர்களின் செலவிடும் ஆற்றலை பாதிப்பதாக  உள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய  சுற்றுலாப் பயணிகள் ரேயனெயார், ஈஸிஜெட் ஆகிய குறைந்த கட்டணங்களில் போக்குவரத்து சேவைகளை வழங்கும் விமானசேவைகளை  நாடத் தலைப்பட்டது தோமஸ் குக்கிற்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும்  பிரித்தானியாவில்  குளிர்காலம் நிலவும் போது  அந்நாட்டு  மக்கள் வெப்பமான நாடுகளுக்கு  பயணம் மேற்கொள்வது காலம் காலமாக இடம்பெற்று வந்திருந்தது.  ஆனால் இந்த முறை காலநிலை மாற்றம் காரணமாக பிரித்தானியாவில்   தொடர்ந்து வெப்பமான காலநிலை நிலவுவதால் அந்நாட்டு மக்கள்  வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதில் அதிக அக்கறை காட்டாது உள்ளனர்.

அது மட்டுமல்லாது  நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக  வீட்டிலிருந்தவாறு இணையத்தளம் மூலம்  தமது போக்குவரத்து  முன்பதிவுகளை செய்து கொள்ளும் நாட்டம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில்  இணையத்தளம் மூலம் சுற்றுலா வசதிகளை மட்டுமல்லாது தங்குமிட வசதிகளையும் துரிதமாக ஏற்படுத்தி தரும் நிறுவனங்கள் பால் மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டு வருகின்றமை  பாரம்பரிய சேவை நடைமுறைகளைப் பின்பற்றி  அதிக கட்டணத்துடன் சேவையை வழங்கும்  தோமஸ் குக்கை வாடிக்கையாளர்கள் மெல்ல, மெல்ல  புறந்தள்ள வழிவகை செய்வதாக அமைந்தது.  

 இந்நிலையில்  தாம்  சரிவுப் பாதையில்  சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தும்  காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப  புரட்சி என்பவற்றுக்கு அமைய தம்மை மாற்றிக் கொள்ளாது எத்தகைய சூழ்நிலையிலும் தம்மால் தாக்குப்பிடிக்க முடியும் என  தோமஸ் குக் நிறுவனத்தின் நிர்வாகிகள்  கருதியிருந்தமை  அந்த  நிறுவனமும் அதனுடன் இணைந்து செயற்படும் நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக முடங்க வழிவகை செய்துள்ளது.

 அந்த நிறுவனத்தை மீட்க இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியைத் தழுவும் கடைசித் தருணம் வரை அதன் நிர்வாகிகள்  அந்த நிறுவனத்தை உடனடியாக திவாலாகாது காப்பாற்ற முடியும் என்றே நம்பியிருந்தனர்.

ஆனால் இறுதியில்   வாடிக்கையாளர்கள் தொடர்பான நிச்சயமற்ற நிலையைக் காரணம் காட்டி கடன் வழங்கும் நிறுவனங்கள் கையைவிரித்ததையடுத்து  தோமஸ் குக் விமான சேவை உள்ளடங்கலாக அந்த நிறுவனக் குழுமத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளன.

தோமஸ் குக் நிறுவனத்தின் சேவைகளை இணையத்தளம் மூலம்  பயண சேவைகளை  வழங்கும் ஏற்பாட்டாளர்களும் பயண நிறுவனங்களும் விஞ்சியிருந்தன.

தோமஸ் குக்குடன் இணைந்து செயற்பட்ட  எயார் டூர்ஸ் மற்றும் மைட்ரவல் நிறுவனங்கள்  அதனை விட்டு விலகியமையும் அந்த நிறுவனத்தை கடன் சுமைக்குள் தள்ளியுள்ளது. கடனைப் பெற முடியாத நிலை காரணமாக தோமஸ் குக் கடந்த காலத் தவறுகளை சீர்செய்து கொண்டு மாற்று வருமானங்களைத் தேடுவதற்கான வாய்ப்பும் வரையறைக்குள்ளானது.

தோமஸ் குக் 8 ஆண்டுகளுக்கு முன்னரும் இதையொத்த திவாலாகும் நிலையின் இறுதிக் கட்டத்தைத் தொட்டு மீண்டிருந்தது.  அச்சமயத்தில் அந்த நிறுவனம் அவசரக்கடன் உதவி மூலம் முடக்கப்படாது  காப்பாற்றப்பட்டிருந்தது.

 தோமஸ் குக் முடக்கப்படுவதற்கு முன்னரான இறுதிக்கட்டத்தில்  அதன் வருடாந்த விற்பனை 9 பில்லியன் ஸ்ரேலிங் பவுணாகவிருந்தது.  அது 16 நாடுகளில் 22,000 ஊழியர்களுடன் செயற்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின்  முடக்கத்தால் அந்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் வேலைவாய்ப்பை இழக்கும்  நிலையை எதிர்கொண்டுள்ளதால் அது   ஒட்டுமொத்த  பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

அத்துடன் அந்த நிறுவனத்தை  நம்பி  கட்டணம் செலுத்தி முன்பதிவுகளை செய்து சுற்றுப்பயணங்களை மேற்கொண்டவர்களின்  பயணங்கள்  அந்த நிறுவனம் திவாலாகியதால் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

நீதிமன்ற ஆவணங்களின் பிரகாரம் தோமஸ் குக்கின் இருப்பில் 3 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பற்றாக்குறை  காணப்படுகிறது.  தோமஸ் குக்  நிறுவனம் தனது நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்ட மை ட்ரவல் நிறுவனம்  கடந்த மே மாதம் விலகிய போது  ஒரு பில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கும் அதிகமான தொகையை அந்நிறுவனத்துக்கு செலுத்த நேர்ந்தமை அதன் நிதி நிலைமையை பெரிதும் பாதித்துள்ளது.

தோமஸ் குக் லங்கா நிறுவனத்துக்கு பாதிப்பில்லை

  பிரித்தானிய தோமஸ் குக் நிறுவனத்தின் முடக்கத்தால் இலங்கையில் செயற்படும் தோமஸ் குக் லங்கா  தனியார் நிறுவனத்துக்கு எதுவித பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த நிறுவனத்துக்கும்   பிரித்தானிய தோமஸ் குக் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தோமஸ் குக் லங்கா நிறுவனம்  தோமஸ் குக் இந்திய நிறுவனத்துக்கு முழுமையாக உடைமையான  அதன் உப நிறுவனமாகும்.

தோமஸ் குக் இந்திய நிறுவனம் 2012 ஆம் ஆண்டிலிருந்து தோமஸ் குக்   பிரித்தானியா நிறுவனத்திடமிருந்து விடுபட்டு சுதந்திரமாக செயற்பட்டு வருகிறது.  அந்த நிறுவனத்துக்கு தோமஸ் குக் என்ற பெயரை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை பயன்படுத்துவதற்கு  உரிமையுள்ளது. 

தோமஸ் குக் இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 67 சதவீதமானவை கனேடிய பெயார்பக்ஸ் நிறுவனத்துக்கும்  ஏனைய பங்குகள் பொதுமக்களுக்கும் உடைமையாகவுள்ளன. அந்த வகையில் தற்போது அந்த நிறுவனத்துக்கு  பிரித்தானிய  தோமஸ் குக் நிறுவனத்துடன் எதுவித தொடர்பும் கிடையாது.

ஆனால்  திவாலாகிய நிறுவனமொன்றின் பெயரைப் பயன்படுத்துவது தமது நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்தப் பெயரை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அந்நிறுவனம்  உள்ளாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தோமஸ் குக்கின்  வீழ்ச்சி  சிறந்த முகாமைத்துவத்தை பேண வேண்டிய அவசியம் மற்றும் காலமாற்றத்துக்கு ஏற்ப  தம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் என்பன குறித்து  உலகிலுள்ள ஏனைய விமான சேவை நிறுவனங்களுக்கும் கம்பனிகளுக்கும் சிவப்பு அபாய எச்சரிக்கையொன்றாகவுள்ளது என்றால் மிகையாகாது. இது  இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானசேவைக்கும் பொருந்தும்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை 2009 ஆம் ஆண்டுக்கும்  2019 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் 240  பில்லியன் ரூபா இழப்பீட்டை சந்தித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதற்கு உரிய வர்த்தக  தந்திரோபாயங்களை  கையாளாமை,  தவறான முகாமை, ஊழல் மற்றும் இலஞ்சம் என்பன காரணமாக அமைந்தன.

இந்நிலையில்  அைனத்து விமானசேவை மற்றும் போக்குவரத்து ஏற்பாட்டு நிறுவனங்களும் ஏனைய  ஸ்தாபனங்களும்  நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தோமஸ் குக் நிறுவனத்துக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை ஒரு சிவப்பு அபாய எச்சரிக்கையாக கருதி அந்த நிறுவனம் விட்ட தவறுகளிலிருந்து பாடங் கற்றுக் கொள்வது அவசியமாகவுள்ளது. 

ஆர்.ஹஸ்தனி