நடந்து முடிந்த வாரம் சஜித் பிரேமதாசவுக்கு பாரிய கடினமான வாரமாகவே அமைந்திருந்தது. பல நெருக்கடிகள் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. எனினும் அவர் அவற்றை எதிர்கொண்டு தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினாலேயே அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிப்பதில் முரண்பட்டுவந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருக்கின்றார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலும் ஏகமனதான ஆதரவும் சஜித்துக்கு கிடைத்துள்ளது. அந்தவகையில் வேட்பாளராகுவதற்காக கடந்த சில மாதங்களாக போராடிக்கொண்டிருந்த சஜித் பிரேமதாசவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அதன்படி சஜித் பிரேமதாசவுக்கும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக் ஷவுக்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்தவாரம் வெ ளியானது. அதன்படி நவம்பர் மாதம் 16ஆம் திகதி நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல்கள் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி நடைபெறும்.
ஒரு கோடியே ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள இந்த தேர்தல் மிகவும் முக்கியமான அரசியல் சூழலில் நடைபெறுகின்றது.
மஹிந்த தரப்பின் வேட்பாளர் தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே பெயரிடப்பட்டு அறிவிக்கப்பட்டார். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளராக அனுர குமார திசாநாயக்கவை பெயரிட்டது.
இந்நிலையில் ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் தொடர்பாகவே நெருக்கடி நீடித்து வந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தாங்கள் தேர்தலில் போட்டியிட தயார் என்பதனை அறிவித்துவந்தனர். ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அறிவிக்காவிடினும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை அவ்வப்போது வெளிக்காட்டி வந்தார்.
ஆனால் சஜித் பிரேமதாச பகிரங்கமாக தனது விருப்பத்தை தெரிவித்ததுடன் நிச்சயம் போட்டியிடுவேன் என்பதனை கூறிவந்தார். இந்த நிலையிலேயே நெருக்கடி நிலை நீடித்து வந்தது. கூட்டங்கள் கலந்துரையாடல்கள் என பல விடயங்கள் அரசியலில் அனல் பறக்கும் வகையில் இடம்பெற்றன. அதன்படி தற்போது சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை பொறுத்தவரையில் இந்த வாரம் கடினமான வாரமாகவே அமைந்தது என்று கூறலாம்.
கடந்த இரண்டு மாதங்களாக சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக தான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று கூட்டங்களில் அறிவித்து வந்தார். அவருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இணைந்துகொண்டு ஆதரவாக உரையாற்றி வந்தனர்.
விசேடமாக மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, அஜித் பி. பெரெரா, ஹரின் பெர்னாண்டோ, ஹர்ஷ டி. சில்வா, ரஞ்சித் மத்தும பண்டார, சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட பல எம்.பி. க்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வழங்கி வந்தனர். மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள். எனவே அவர்களின் மாற்றம்
ஆச்சரியத்தை கொடுத்தாலும் அவர்கள் சஜித் பக்கம் இருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.
அதேபோன்று ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுடனும் சஜித் பிரேமதாச தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தார். ஒரு கட்டத்தில் பங்காளிக் கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க ஆரம்பித்தன. அதாவது பங்காளிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுவாருங்கள் என்று சஜித்துக்கு ரணில் கூறியபோது அவர் அதனை ஒரு அணுகுமுறையில் கையாண்டு அவர்களின் ஆதரவை பெற்றார்.
அதன் பலனாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவையே வேட்பாளராக களமிறக்கவேண்டும் என்று பங்காளி கட்சிகளின் தலைவர்கள் பகிரங்கமாக அறிவிக்க ஆரம்பித்தனர்.
இந்த சூழலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை புதிய நிபந்தனை ஒன்றை முன்வைத்தார். அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவேண்டுமானால் பல நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க சஜித்திடம் கூறினார்.
இதன்போது பல நிபந்தனைகளை ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார். அதாவது பிரதமராகவும் கட்சியின் தலைவராகவும் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க நீடிக்கவேண்டும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் ஆறு மாதங்கள் தொடக்கம் ஒருவருட காலப்பகுதிக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கவேண்டும். ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வாக புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படவேண்டும். மரண தண்டனைக்கு ஆதரவு வழங்கப்படக்கூடாது போன்ற விடயங்கள் நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. அப்போது சஜித் பிரேமதாச உடனடியாக எந்தப் பதிலையும் வழங்கவில்லை. தான் நாளை அதாவது பதன்கிழமை மீண்டும் பிரதமரை சந்திப்பதாக கூறிவிட்டு சஜித் சென்றுவிட்டார்.
அதன் பின்னர் சஜித் பிரேமதாச தனது தரப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
நிதியமைச்சில் அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காஙகிரஸின தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஆகியோரும் சஜித் அணியினரின் சார்பில் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம், எரான் விக்கிரமரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது நிபந்தனைகளை ஏற்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மறுதினம் புதன்கிழமை மீண்டும் பிரதமர் ரணிலை சஜித் பிரேமதாச சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது நிபந்தனைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச நிபந்தனைகளை ஏற்க முடியாது என்ற வகையிலேயே இந்த சந்திப்பின்போது கருத்து வெ ளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமை ஒழிப்பு தொடர்பில் தனது நிலைப்பாட்டினை சஜித் பிரேமதாச எடுத்துக்கூறியிருக்கின்றார். ஆனாலும் ஒருவருட காலத்துக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியதாகவும் அந்த விடயத்தில் விடாப்பிடியாக நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் பெரும் கஷ்டப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியான பின்னர் உடனடியாகவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழித்துவிட்டு பேரளவில் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு விரும்பவில்லை என்று இதன்போது சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலைமை இவ்வாறு இழுபறியில் நீடித்த நிலையில் புதன்கிழமை மாலை சஜித் ஆதரவு அணியினர் மத்துகமவில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச 'எனது அரசியல் வாழ்க்கையில் எனக்கென தனியான அரசியல் அடையாளம் இருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்காக நிபந்தனைகளுக்கு அடிபணியவோ கௌரவத்தை விட்டுக்கொடுக்கவோ முடியாது. நான் மற்றவர்களின் தேவைகளுக்காக செயற்படும் கைப்பொம்மையும் இல்லை. மக்களே எனது உறவினர்கள். அவர்களின் ஆணைக்கமையவே செயற்படுவேன். நான் இந்த ஜனாதிபதி தேர்தலில் நேர்மையாகவே களமிறங்குகிறேன் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
எதற்காகவும் நான் யாருடனும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியலில் ஈடுபட போவதில்லை. எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. ஜனாதிபதி வேட்பாளராகுவதற்காக எனது கௌரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது. எதற்காகவும் யாரையும் காட்டிக்கொடுக்கும் அவசியமும் எனக்கு இல்லை. என்னை யாராவது உருவப் பொம்மையாக எண்ணுவார்களாக இருந்தால் அந்த காலம் முடிவடைந்து விட்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சஜித் அறிவித்திருந்தார். இதன்மூலம் அவர் பல விடயங்களை கட்சிக்கு மறைமுகமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை மாலை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. அதற்கு முன்னர் சஜித் பிரேமதாச அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வேட்பாளர் விவகாரத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டோர் சுமுகமாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன.
அதன் பின்னரே சிறிகொத்தாவில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தெரிவு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
செயற்குழுக் கூட்டம் ஆரம்பித்ததும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக பிரேரிப்பதாக அறிவித்தார். அதற்கு செயற்குழுவின் உறுப்பினர்கள் ஏகமனதாக தமது ஆதரவை வெளியிட்டனர். இதனையடுத்து முக்கிய உறுப்பினர்கள் உரையாற்றியதுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தினர்.
தொடர்ந்து சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் சிறிகொத்தா தலைமையகம் முன்பாக ஒன்றுகூடி சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்ற ரீதியில் மிகவும் பிரபலமானவர். அத்துடன் கடந்த ஐந்து வருடங்களாக வீடமைப்பு அமைச்சின் ஊடாக திறம்பட பணியாற்றியவர் என்ற பெயரையும் எடுத்தவர். 2015ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தான் போட்டியிடுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் மைத்திரிபால சிறிசேன இறுதியில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டார்.
தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோர் களத்தில் இறங்கிவிட்டனர். மறுபுறம் அனுரகுமார திசாநாயக்கவும் களத்தில் உள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை எந்த தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை. சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்காது என்றே தெரிவிக்கப்படுகின்றது.
எனவே பிரதான வேட்பாளர் களில் ஒருவருக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கலாம். பொதுஜன பெரமுனவுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. சில தினங்களில் முடிவுகள் வரலாம்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை. சில தினங்களில் அந்த அறிவிப்பும் வெளியாகும்.
என்று எதிர்பார்க்கப்படுகின்றது. யாருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பது என்பதனை நாங்கள் ஆறுதலாக தீர்மானிப்போம் என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவுக்கு சவால்கள் இல்லாமல் இல்லை. சஜித் பிரேமதாச ஏனைய அமைப்புக்களின் மற்றும் கட்சிகளின் ஆதரவை பெறவேண்டியுள்ளது. மஹிந்த தரப்புடன் விரைவில் 19 கட்சிகள் இணைந்துகொண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே சஜித் பிரேமதாசவும் கூட்ட மைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெறவேண்டியுள்ளது. எப்படியிருப்பினும் போராடி சஜித் பிரேமதாச வேட்பாளராகிவிட்டார். இனி அடுத்த கட்டத்துக்கான திட்டமிடல்களை அவர் எவ்வாறு செய்யப்போகின்றார் என்று பார்ப்போம்.
எப்படியிருப்பினும் நாட்டில் தேர்தல் காய்ச்சல் ஆரம்பித்துவிட்டது. பிரதான கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இனி பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தமது கொள்கைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களின் ஊடாக வெளியிடுவார்கள். மக்கள் கைகளில் யாரிடம் அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டை கையளிப்பது என்ற முடிவு தங்கியுள்ளது என்பதே யதார்த்தமாகும்.
- ரொபட் அன்டனி -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM