(எம்.ஆர்.எம்.வஸீம்)

ரணில் விக்ரமசிங்க செயற்திறமையற்ற தலைவர் என நாங்கள் தெரிவித்துவந்த கருத்தை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுதிப்படுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அத்துடன் ரணில் விக்ரமசிங்க நாட்டின் முதல் பிரஜையான ஜனாதிபதியாக முடியாது என்பது நேற்றுடன் உறுதியாகியுள்ளது. அவர் ஜனாதிபதியானால் நாட்டின் ஒற்றையாட்சி, இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் தற்போது மக்களுக்கு இல்லாமல்போயுள்ளது. 

ரணில் விக்ரமசிங்க எப்போதும் மேற்கத்திய நாடுகளின் கொள்கை மற்றும் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவகையில் தீர்மானங்களை நிறைவேற்றக்கூடியவராக இருந்து வந்திருக்கின்றார்.  

கடந்த காலங்களில் அவர் மேற்கொண்ட தீர்மானங்கள் நாட்டுக்கு பாதிப்பாகவே இருந்துள்ளன. அதனால் அவர் நாட்டின் ஜனாதிபதியாக வரமாட்டார் என்பது தற்போது உறுதியாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. அத்துடன் இது நாட்டு மக்களுக்கு கிடைத்து முதல் வெற்றியாகும் என்றும் அவர் கூறினார்.