(செ.தேன்மொழி)

அரலகங்வில, நொச்சியாகம, வாரியபொல மற்றும் பன்னல ஆகிய பகுதிகளில் நேற்று இடம்பெற்ற  வாகன விபத்துக்களில் சிக்கி சிறுவனொருவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் சிறுவனொருவன் மற்றும் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  இந்த விபத்துகள் தொடர்பில் குறித்த வாகனங்களின் சாரதிகளை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அரலகங்வில

அரலகங்வில - தளுகான சந்தியில் மனம்பிட்டி நோக்கிச் சென்ற கடற்படை டிப்பர் வாகனம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது  மோட்டார் சைக்கிளின் ஓட்டனர் , பின்னால் சென்ற பெண் மற்றும் சிறுவனொருவனும் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

குடாவௌ - தளுகான பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நிரஞ்சன் தினேஸ் குணதிலக்க எனப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த அவருடைய மனைவியும் மகனும் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நொச்சியாகமம்

நொச்சியாகமம் பகுதியில் அநுராதபுரம் - புத்தளம் வீதியில் மொரவக்க கந்தை பகுதியில் புத்தளம் நோக்கிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்று வீதி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது தப்பிச் சென்று லொறியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ரத்னாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாரியபொல

வாரியபொல - அநுராதபுர வீதியில் மினுவாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிள் மோட்டார் வாகனமொன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரான பெண்ணும் , சிறுவனொருவனும் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளான். இதனை தொடர்ந்து குறித்த பெண் குருநாகலை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

அவுலேகம பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய அனுஷ்க சிதும் வீரசேகர என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

விபத்து தொடர்பில் மோட்டார் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னல

பன்னல பகுதியில் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் பின்னால் சென்ற நபரும் மாக்கந்துர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

பன்னல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ரணதுங்க முதியன்சேலாகே ரொஷான் மதுசங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பஸ்சின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.