கடல் தொழிலுக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம், பாசையூர் கடற்கரை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான நிரோசன் வின்சியா (வயது 26) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த 21ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு தேநீர் வைப்பதற்கு அடுப்பினை பற்றவைத்துள்ளார். இதன்போது மண்ணெண்ணெய் அடுப்பின் மூடி சரியாக மூடாத காரணத்தால் சிந்திய மண்ணெண்ணெய் அவரின் ஆடையில் பற்றி தீப்பற்றியுள்ளது.

மனைவி தீயில் எரிவதைக் கண்ட கணவன் ஒருவாறு தீயினை அணைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரைச் சேர்த்தார்.

4 நாட்ளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குடும்ப பெண் நேற்று(25) மாலை உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது