காஸ்மீர் விவகாரம் தொடர்பில் இந்தியா பாக்கிஸ்தானிற்கு இடையில் அணுவாயுதமோதலொன்று இடம்பெறும் ஆபத்துள்ளதாக உலக தலைவர்களிற்கு முயற்சிகளை மேற்கொண்டதாக பாக்கிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

உலகதலைவர்களை ஐநாவில் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவே நான் முக்கியமாக ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எவரும் கற்பனை செய்யாத உணராத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பேரழிவை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றோம் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

கியுபா நெருக்கடிக்கு பின்னர் அணுவாயுதங்களை கொண்டுள்ள இருநாடுகள் மோதலை நோக்கி நகர்ந்துள்ளமை இதுவே முதல் தடைவ என தெரிவித்துள்ள இம்ரான் கான் பெப்ரவரியில் பாக்கிஸ்தானும் இந்தியாவும் அணுவாயுத மோதலில் ஈடுபடும் நிலையில் காணப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரியில் எனது இராணுவதளபதியும் விமானதளபதியும் என்னை அழைத்து இந்திய விமானங்கள் வந்து தாக்குதலை மேற்கொண்டுவிட்டு செனறன என தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ள இம்ரான் கான் நாங்கள் பதிலிற்கு என்ன செய்வது என அவர்கள் கேட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அவ்வாறான முடிவை எடுக்கவேண்டுமா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜேர்மன் சான்சிலர் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தலைவர்களுடன் தனது அச்சங்களை வெளியிட்டதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் தற்போது ஜம்முகாஸ்மீரில் விதித்;துள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் வன்முறைகள் வெடிக்கலாம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மக்கள் வீதிக்கு வருவார்கள் அதன் பின்னர் என்ன நடக்கும் என கேள்வி எழுப்பியுள்ள இம்ரான்கான் மக்கள் படுகொலை செய்யப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.