(நா.தனுஜா)

நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் மீண்டும் நாட்டின் பாதுகாப்பு நிலைவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வரவேற்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது.

 

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

மனேலா கொரெடி தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் குழுவொன்று கடந்த 10 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், இன்றைய தினம் வரை நாட்டில் தங்கியிருந்தனர். 

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவியின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் கீழான 6 ஆவது மீளாய்வுக் கூட்டத்தை நடத்துவதற்காகவே இக்குழு இலங்கை வந்திருந்தது.

எமது குழுவினர் இலங்கையின் உரிய அதிகாரிகளுடன் பிரதிநிதிகள் மட்ட இணக்கப்பாடொன்றுக்கு வந்திருக்கின்றோம். அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் மீண்டும் நாட்டின் பாதுகாப்பு நிலைவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வரவேற்கின்றோம் என்று மனேலா கொரெடி தெரிவித்திருக்கிறார்.