நாடளாவிய ரீதியில் கடந்த 22 ஆம் திகதி முதல் நிலவும் சீரற்ற காலநிலையால் தென் மாகாணம், மேல் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 20,815 குடும்பங்களைச் சேர்ந்த 80,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணம் - காலி மாவட்டம்

காலி மாவட்டம்

காலி மாவட்டத்தில் 2,933 குடும்பங்களைச் சேர்ந்த 11,510 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

மேலும் காலி மாவட்டத்தில் 18 வீடுகள் முழுமையாகவும், 135 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

குறித்த மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 91 குடும்பங்களைச் சேர்ந்த 274 பேர் சிறி சதகம் விகாரை, மில்துவ சுத்தராமய விகாரை, பிரிதிகம சுந்தராம விகாரை மற்றும் அமுகொடை வித்தியாலயம் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்டம்

மாத்தறை மாவட்டத்தில் 3,787 குடும்பங்களைச் சேர்ந்த 13,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் முழுமையளவிலும், 192 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

குறித்த மாவட்டத்தில் நிலவும் பலத்த மழை காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பத்தந்துர கோயிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டம்

அம்பாந்தோட்டை மாவட்டத்தைப் பொறுத்தரையில் வெள்ளம் மற்றும் மின்சார பாதிப்பு காரணமாக 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 3 வீடுகள் முழுமையாகவும், 7 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

தென் மாகாணத்தைப் பொறுத்தவரையில் மொத்தமாக 6,730 குடும்பங்களைச் சேர்ந்த 25,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளளனர். அத்துடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் 27 குடும்பங்கள் பகுதியளவிலும் 334 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

96 குடும்பங்களைச் சேர்ந்த 289 பேர் பாதுகாப்பான ஐந்து இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணம்

களுத்துறை மாவட்டம்

களுத்துறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தொடரும் பலத்த மழை காரணாக 157 குடும்பங்களைச் சேர்ந்த 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் முழுமையாகவும், 46 வீடுகள் பகுதியளவிலம் சேதமடைந்துள்ளன.

கொழும்பு மாவட்டம்

கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளம் காரணமாக 3,165 குடும்பங்களைச் சேர்ந்த 10,984 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 387 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் 729 குடும்பங்களைச் சேர்ந்த 2,568 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டம்

கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் பலத்த மழை காரணமாக 10,755 குடும்பங்களைச் சேர்ந்த 43,322 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். அத்துடன் ஒரு வீடு முழுமையாகவும் 46 வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. 2,871 குடும்பங்களைச் சேர்ந்த 12,042 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தைப் பொறுத்தவரையில் மொத்தமாக 14,077 குடும்பங்களைச் சேர்ந்த 54,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வீடுகள் முழுமையாகவும் 479 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 3,600 குடும்பங்களைச் சேர்ந்த‍ 14,610 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணம்

கண்டி மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம்

கேகாலை மாவட்டம் நிலவும் பலத்த மழை, மின்னல் மற்றும் இடி தாக்கம் காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.

மொத்தமாக தென், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ உள்ளிட்ட மாகாணங்களைச் சேர்ந்த காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை போன்ற எட்டு மாகாணங்களிலும், வெள்ளம், பலத்த மழை, இடி மின்னல் தாக்கம் மற்றும் மண்சரிவு காரணமாக 20,815 குடும்பங்களைச் சேர்ந்த 80,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 696 குடும்பத்தைச் சேர்ந்த 14 ஆயிரத்து 899 பேர் 42 முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த அனர்த்தங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் 30 வீடுகள் முழுமையாகவும், 819 வீடுகள் பகுதியளவிலும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

அதேவேளை 3,696 குடும்பங்களைச் சேர்ந்த 14,899 பேர் பாதுகாப்பான இடங்களில் இடம்பெயர்ந்தும் தங்க வைக்கப்ப்டடும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.